Skip to content

எசப்பாட்டு – ஆண்களோடு பேசுவோம் – ச. தமிழ்ச்செல்வன் – நூல் அறிமுகம்

https://thamizhbooks.com/product/esappaatu-angalodu-pesuvom/

ஒரு ஆணால் எழுதப்பட்ட ‘ஆண்களோடு பேசுவோம்’ எனும் புத்தகத் தலைப்பைப் பார்த்தவுடன் ‘எங்க சைடையும் கொஞ்சம் கேளுங்க’ எனக் கூறி பெண்ணியம் பேசுபவர்களை திருத்தப் போகிறார் ஆசிரியர் என்றே நினைத்தேன். ஆனால் “பெண்ணியம் பெண்ணியம் எனப் பேசி நமது கலாச்சாரமும் பண்பாடும் நாசமாப்போனது தான் மிச்சம்” எனக்கொந்தளிக்கும் ஆண்களோடு சற்று பேசிப் பார்ப்போம் வாருங்கள் எனக்கூறி நம்மை அழைத்து செல்கிறார் ஆசிரியர். இதம் தரும் மனைவியாய், ஈன்று புறந்தரும் தாயாய் மட்டுமே இருக்க கடமைப்பட்ட பெண்கள் (மொத்தத்தில் ஆண்களுக்கு ஒரு நல்ல சேவை மையமாக), தாங்கள் விருப்பப்பட்ட செயல்களை செய்து வாழ்க்கையை அனுபவித்தார்கள் என்றால் அதனை ஆண் உலகம் எவ்வாறு பார்க்கிறது எப்படி எல்லாம் கமெண்ட் செய்கிறது என்பதை நிஜ வாழ்க்கை உதாரணங்களோடு விளக்கியுள்ளார். 

மரியாதை இல்லாத மருமகள், சுடு சொற்களை வாரி வீசும் மனைவி, சந்தேகப்பட்டு நித்தம் நித்தம் அண்ணனின் நிம்மதியைக் கெடுக்கும் அண்ணி என பெண்கள் மீது ஆண்கள் வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் பொறுமையாக விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். மேலும் சந்தேகம் என்பது ஒரு ஆணுக்கு வந்தால் அது உடனடியாக எப்படி வன்முறை வடிவம் எடுக்கிறது என்பதை நெஞ்சை உறைய வைக்கும் நிகழ்கால மற்றும் வரலாற்று உதாரணங்களோடு விளக்கியுள்ளார். மாமியார் நாத்தனார் பிரச்சினைகளின் போது ‘பெண்ணுக்கு பெண்ணே எதிரி’ எனும் மாதிரியான வாசகங்களுக்கும் “கணவன் என்கின்ற ஆணைச் சார்ந்தவை தானே இந்த உறவுகள். இதனால் வருகின்ற பிரச்சனைகளில் இருந்தும் ஆணை முழுமையாக விடுவித்து பெண்களைக் காரணம் காட்டுவது சுத்த ஆணாதிக்கம்” எனக் கூறுகிறார். வீட்டிற்கு வரும் ஆண்களை தன் குழந்தைகளுக்கு மாமா என அறிமுகம் செய்து வைப்பதையும்,  தெரிந்த அக்கா ஒருத்தியின் கணவனையும் அண்ணா என்று அழைப்பதையும் பெண்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளாகவே ஆசிரியர் கூறுகிறார். இலக்கியத்திலும் பாடல்களிலும் ஆண்களின் காம விருப்பங்கள் அழகிய கவிதைகளாக வெளிப்படுகின்றன. ஆனால் “காமம் செப்புதல் பெண்டிற்கு அழகல்ல” எனக்கூறி காம இச்சைகளிலும் பெண்களின் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் பறித்து விட்டோம் என்று கூறுகிறார். ஆண்களை ஈர்க்காத வண்ணம் பெண்களுக்கு உடை அணிவிப்பதை விட, பெண்களின் உடைகளுக்கு ஏற்றவாறு ஆண்களின் கண்களைப் பழக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உதாரணத்துக்கு நைட்டி வந்த காலத்தில் அதன் மேல் ஒரு துண்டு போட்டு ஆண்களின் வக்கிரப் பார்வையில் இருந்து தப்பிய பெண்கள், பின்னர் அவர்கள் கண்கள் சற்று பழக்கப்பட்டவுடன் இப்போது நைட்டியிலேயே வெளியே உலா வரும் காலம் வந்துவிட்டது. அதேபோலவே லெக்கின்ஸ், shorts, skirts, டாப்ஸ் என மற்ற உடைகளுக்கும் பெண்களை குறை கூறாமல் ஆண்களின் பார்வையை சீராக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

வீட்டோடு இருப்பதே உயரிய பண்பாடு. வீதிகளில் இறங்கி வியாபாரம் செய்யும் உழைக்கும் வர்க்கத்துப் பெண்களை “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா”, “எலந்தபழம் எலந்தபழம் எலந்தபழம்” என்றெல்லாம் கூறி கிண்டல் செய்யும் பாடல்களை மன வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். சமண மதத்தில் கடைபிடிக்கப்படும் சாந்தாரா (பட்டினி கிடந்து மோட்சம் அடைதல்) மதச் சடங்கு, பொது இடங்களில் காலை அகட்டி உட்காரும் ஆண்களின் MENSPREADING எனும் சர்வதேசப் பிரச்சனை, உற்று நோக்கும் ஆண்களின் பார்வை என சகலத்தையும் அலசி ஆண்களின் மனோபாவத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். மேலும் செங்கொடி இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மணலி கந்தசாமியின் போராட்டம், மணலூர் மணியம்மாளின் வீர வாழ்க்கை, அறிவொளி இயக்க பிரச்சார நிகழ்வுகள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ எனும் வரலாற்றுச் சின்னத்தின் பின்னணி நிகழ்வான ஜோன் எனும் வீரம் செறிந்த பெண்ணை உயிரோடு தீயிட்டு கொளுத்திய நிகழ்வு, கியூபெக் புரட்சியின் போது அமெரிக்க படை வீரர்களால் கூட்டுக் கருவாக்கம் செய்யப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தை, போஸ்னியா ஹெர்சகோவினா போர் பாசறைகளில் அமைக்கப்பட்டிருந்த பாலியல் வன்முறைக்கான முகாம்களில் பெண்கள் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ள வைக்கப்பட்ட சம்பவங்கள், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் பெண்கள் உடலில் நடத்தப்பட்ட வன்முறைகள் அதற்கு அஞ்சி ராவல்பிண்டியை அடுத்து உள்ள கிராமத்தில் ஒரே கிணற்றுக்குள் 90 பெண்கள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் போன்ற அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

சார்லஸ் டார்வின், சர்.சி.வி. ராமன் மற்றும் பல அறிவியல் அறிஞர்கள் கூட சரியான புரிதல் இன்றி பெண்களுக்கான வாய்ப்புகளை மறுத்ததையும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் விஞ்ஞானி பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் பேசியபோது, பெண்கள் அறிவியல் சோதனை கூடங்களில் இறங்கினால் ஆண்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நகைச்சுவையாகவும் கொச்சையாகவும் கூறியதை இதில் குறிப்பிட்டு மனம் வருந்தியுள்ளார். மேடம் கியூரி, கமலா சோஹோனி, லீலாவதி, ரோசலிண்ட் பிராங்கிளின் போன்ற பல பெண் அறிவியல் அறிஞர்களுக்கு நிகழ்ந்த சோகங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் ஜான் க்ரே எழுதிய “Men are from Mars, women are from Venus” எனும் புத்தகமும் , சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்கான “பொம்பளை பொம்பளையா இருக்கணும்” என்பதும் வேறு வேறு மொழிகளில் “ஆண் வேறு பெண் வேறு என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்” எனும் பிற்போக்குத்தனத்தையே நம்முடைய மனங்களில் ஆழப் பதிய வைக்கின்றன என்பதைக் கூறி மனம் வருந்துகிறார். 

மொத்தத்தில் இந்தப் புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. பெண்ணியம் பேசுபவர்களை இலக்கியம், புராணம், கலாச்சாரம் பண்பாடு எதுவும் இல்லை என்றால் பெண்களின் உடல்வாகு, அறிவியல் போன்ற அனைத்து விதமான ஆயுதங்களையும் கையில் எடுத்துக்கொண்டு மட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு தெள்ளத் தெளிவாக பதில் கூறியுள்ளது.  

தமிழக அரசியல் வரலாறு – ஆர். முத்துக் குமார் – பாகம் 1 – வாசிப்புக் குறிப்புகள்

https://nithyashrinivasan.files.wordpress.com/2020/06/6a604-tavnew1.jpg

 

தமிழக அரசியல் வரலாறு (1945 முதல் 1975 வரை)

 

தமிழக அரசியல் வரலாறு பற்றிய ஆர்.முத்துக்குமாரின் புத்தகத்தைப் படித்தேன். இரண்டு பாகங்களில் உள்ள அந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் என்னைக்கவர்ந்த நிகழ்வுகளையும் சம்பவங்களையும் ஒரு நீண்ட பதிவாக இங்கே வெளியிட்டுள்ளேன்.

குழந்தை பாரியைப் பார்த்துக் கொண்டே, இரு பாகங்களையும் படித்து முடித்தேன்.  நாம் பள்ளியில் படித்ததை விட, இந்த இரு நூல்கள் தமிழக வரலாற்றை, மிகவும் சுவாரசியமான நடையில் நமக்கு அறிமுகம் செய்கின்றன.

கூகுள் வழங்கும் ஒலி உரை மாற்றி – Speech to Text மூலம் இக்கட்டுரையை தினமும் கொஞ்சமாக, நான் கைபேசியில் பேச, எனக்காக கூகுள் எழுதித் தர, கட்டுரை முழுதும் இவ்வாறு உருவானது. இறுதியில், கமா, முற்றுப்புள்ளி, மேற்கோள்குறி மட்டும் கணினியில் சேர்த்தேன்.

தமிழர் அனைவரும் தம் வரலாற்றை அறிய, இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும். நாம் அறிந்த பெருந்தலைகளின் சுருக்கமான வரலாறு இவற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா’ என்பது எத்தனை பெரிய கூற்று என்பதை இந்த நூலில் உணர்ந்தேன்.

இந்ந நூல்களில் என்னைக் கவர்ந்த வரலாற்று நிகழ்வுகளை இங்கே எழுதியுள்ளேன். பலவற்றை விட்டிருக்கலாம். முழுதாக அறி இரு நூல்களையும் தவறாமல் படியுங்கள்.

நூல் ஆசிரியர் ஆர். முத்துக்குமார் எழுதிய அறிமுகக் குறிப்பு இங்கே.

http://writermuthukumar.blogspot.com/2013/01/blog-post.html

நூலின் மூன்றாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

1945(sep) – வேவல் பிரபு அறிக்கை:

அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வேவல் பிரபு இந்தியாவுக்கு கூடிய விரைவில் சுதந்திரம் தரப்படும் என்றும் தேர்தல் வேலைகளை தொடங்குங்கள் என்றும் அறிவித்தார். லண்டன் சென்று பிரதமர் அட்லியை சந்தித்து பேசிவிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையே இது. இனியும் இந்தியாவை ஆள முடியாது என பிரிட்டிஷாருக்கு புரிந்து விட்டது. ஆகவே சுதந்திரம் தரக்கூடிய நேரத்தில் இந்தியாவில் முறையான நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான முன்முயற்சியே இது.

 

முக்கியக் கட்சிகள்:

அந்த அறிக்கையைத் தொடர்ந்து பல தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். அப்போது தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற முக்கிய மூன்று கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக்  தேர்தலில் இறங்கின. அதுவரை காங்கிரஸ் கட்சிக்கே சிம்மசொப்பனமாக இருந்து வந்த நீதிக்கட்சி அப்போது பெரியார் வசம் வந்திருந்தது. அவர் அக்கட்சியின் பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றி இது இனி தேர்தல் அரசியலில் ஈடுபடாது என்று அறிவித்தார்.

 

1946 தேர்தல்:

தேர்தலில் எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1937 தேர்தலில் காங்கிரஸ் வென்றபோது யார் யாரெல்லாம் முதல்வரானார்களோ அவர்களுக்கே இப்போதும் பதவி என்பது காங்கிரஸ். அதன்படி பார்த்தால் சென்னை மாகாணத்தில் அப்போது வென்றது ராஜாஜி. ஆனால் வழக்கம்போல தலைமை சொன்ன கருத்துக்கு முரண்டு பிடித்தது சென்னை. காமராஜர் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக இருந்தபோது ஒரு முறை சென்னை வந்த காந்திக்கு அவர் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. ஆகவே ராஜாஜியிடம் சென்று கட்சிப் பணிகள் பற்றி விவாதித்தாராம். மேலும் அவருடைய ஹரிஜன் பத்திரிக்கையில் ராஜாஜியின் கீழ் தலைமை அமைவதே நன்றாக இருக்கும் என்பது போல் எழுதிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காமராஜ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகி விட்டார். பிறகு காந்தி எவ்வளவோ வற்புறுத்தியும் காமராஜர் சமாதானம் அடையாதில் காந்திக்கு வருத்தம். இந்தப் பின்னணியில்தான் முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பிரச்சினை கிளம்பியது. ஆகவே கட்சி மேலிடம் இந்த விஷயத்தில் இறங்கி “3 பேர் கொண்ட பட்டியலை அனுப்புங்கள். அதிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்கிறோம்” என்றார் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அபுல் கலாம் ஆசாத்.

 

டி. பிரகாசம் (தெலுங்கர்):

கட்சி மேலிடம் போட்ட உத்தரவைக் கண்டுகொள்ளாமல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தங்களுக்குள்ளேயே முதல்வரைத் தேர்வு செய்தனர்.  காமராஜர் சி.என்.முத்துராமலிங்க முதலியாரின் பெயரை முன்மொழிந்தார். அவரை எதிர்த்து டி.பிரகாசத்தின் பெயர் முன்மொழியப்பட்டது.  காமராஜர் முன்மொழிந்தார் என்ற காரணத்தாலேயே ராஜாஜி ஆதரவாளர்கள் நடுநிலை வகிக்கவே பிரகாசத்தின் பக்கம் வெற்றி சென்றது.

 

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (தெலுங்கு பேசும் தமிழர்):

பிரகாசம் ஆட்சிக்குத் தலைவர்.  காமராஜர் கட்சிக்குத் தலைவர். ஆகவே ஆட்சித் தலைவரைப் பற்றிய தொடர்ச்சியான புகார்கள் கட்சித் தலைவரிடம் வந்தவண்ணம் இருந்தன. அவர் ஆட்சியில் ஆந்திரர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று பல்வேறு புகார்கள் எழுந்தன.  இவரே பின்னாளில் ஆந்திரப் பிரிவினைப் போராட்டத்திற்கு தலைமை வகித்து ‘ஆந்திர கேசரி’ என்று அழைக்கப்பட்டவர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த காமராஜர் ஓராண்டுக்கு பிறகு (1947-Feb) இவருக்கு எதிராக ஓமந்தூராரை நிறுத்தி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். இம்முறை ராஜாஜியின் ஆதரவு கிடைக்கவே ஓமந்தூரார் வெற்றி பெற்றார். நேர்மையானவர், பக்திமான் போன்ற நல்ல அம்சங்கள் இவரிடம் இருந்தாலும், ஆங்கிலம் தெரியாது, அனுபவக் குறைவு போன்ற எதிர்மறை அம்சங்களும் இவரிடம் இருந்தன. காமராஜர் வந்து கேட்டபோது ரமண மகரிஷியிடம் சென்று ஆலோசித்த பின்னரே சம்மதிக்கும் அளவுக்கு இவர் பக்திமானாக விளங்கினார். மாகாண அரசியலில் இருந்து விலகிய ராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

 

சுதந்திர தின சர்ச்சை:

ஆகஸ்ட் 15 நெருங்கிக் கொண்டிருந்தது. நாடு தழுவிய அளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது காங்கிரஸ். எதிர்கட்சியான கம்யூனிஸ்டும் சுதந்திர தினத்தை வரவேற்றது. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவரான பெரியார் அதனைக் ‘கருப்பு தினம்’ என்று அறிவித்தார். ஏன் என்று தெரிந்து கொள்ள அவரது பின்புலத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் பிராமணர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பிராமணரல்லாதோரை வெறுப்படைய வைத்திருந்தது. இந்நிலையில்தான் ‘பிராமணரல்லாதோர் இயக்கம்’ என்ற ஒன்று உருவானது. அதுவே 1916-ல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக மாறியது. இச்சங்கம் நடத்திய பத்திரிக்கையின் பெயர்தான் ‘ஜஸ்டிஸ்’. இதுவே பின்னாளில் அக்கட்சிக்குப் பெயரானது. காங்கிரஸுக்கு எதிரான கட்சி என்பதால் இதனை ‘பிரிட்டிஷாருக்கு ஆதரவான கட்சி’ என்று காங்கிரஸ்காரர்கள் விமர்சனம் செய்தனர். 1920 தேர்தலில் ஒத்துழையாமை இயக்கம் காரணமாக காங்கிரஸ் கட்சி ஈடுபடவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஈடுபட்டு சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. சட்டமன்றத்தில் நீதிக்கட்சி ஆட்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் காங்கிரஸில் இருந்து பிரிந்த சுயராஜ்ஜியக் கட்சியின் தலைவர் சத்தியமூர்த்தி.

அடுத்தடுத்த தேர்தலில் நீதிக்கட்சியே ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 1937 தேர்தலில் காங்கிரஸ் இறங்கி முதல்வர் நாற்காலியை ராஜாஜி வசம் ஒப்படைத்தது. அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் தோல்வி மற்றும் கட்சிப் பூசல்கள் காரணமாக பலவீனமடைந்து கடைசியில் பெரியாரிடம் தஞ்சம் புகுந்தது. அடிப்படையில் காங்கிரஸ்காரர் ஆன பெரியார் அக்கட்சியில் இருந்தபடியே வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி வந்தார். ஆனால் கட்சி அதனைத் தொடர்ந்து நிராகரித்து வரவே வெறுப்படைந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற ஒன்றை நடத்தி வந்தார். ‘குடியரசு’ என்பது அவ்வியக்கத்தின் பத்திரிக்கை. அதன் பின்னரே நீதிக்கட்சித் தலைவராக பொறுப்பேற்று அதனை திராவிட இயக்கமாக மாற்றினார். எனவே தான் சுதந்திர தினத்தை பிரிட்டிஷாரிடம் இருந்து பிராமணர்கள் பெற்ற சுதந்திரம் என்று கருதினார். எனவேதான் அதனை துக்க நாள் என்று விமர்சித்தார். திராவிடநாடு அமைவதே நம்மை நாமே ஆள வழிவகுக்கும் பரிபூரண சுதந்திரமாகக்  கருதினார்.

 

தமிழரசுக் கழகம் – ம.பொ.சி பதிலறிக்கை:

‘பிரிட்டிஷ் எதிர்ப்பு, வட இந்திய எதிர்ப்பு என்ற இரு முனைப்போரில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு, தற்போது ஒரு முனையில் வெற்றி கிடைத்துள்ளது. எதற்காக இதனை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும்?’ என்று காங்கிரஸின் துணை அமைப்பான தமிழரசுக் கழகத்தை நடத்தி வந்த மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதைப்படித்த சி.என்.அண்ணாதுரை இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் சுதந்திர தினத்தை ‘இன்ப நாள்’ எனக் குறிப்பிட்டு திராவிட நாடு இதழில் எழுதினார். இவ்வாறாக குரு-சிஷ்ய உறவில் இருந்த அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின.

 

பெரியார் – அண்ணா:

மரியாதை நிமித்தமாக, இன்ப நாள் குறித்த அறிக்கையை, இதழில் வெளியிடுவதற்கு முன்னர், பெரியாரிடம் ஒரு முறை காட்டி அவரது கருத்தில் ஏதேனும் மாற்றம் உண்டா எனக் கேட்டு வர என்.வி.நடராசனை தூது அனுப்பினார் அண்ணா. ஆனால் பெரியாரோ படித்துப் பார்த்து விட்டு ‘வெங்காயம்’ எனக்கூறி புறக்கணித்து விட்டதால், அது இதழில் நேரடியாக வெளியானது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. அண்ணாவுக்கு ஆதரவாக எழுதிய கருணாநிதியின் முரசொலி பத்திரிக்கைகள் கொளுத்தப்பட்டன. இவ்வாறாக ஒரு வருடம் கழிந்த நிலையில் 1948-இல் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தான் இருவரும் மீண்டும் இணைந்தனர். உயர்நிலைப் பள்ளிகளில், முதல் மூன்று படிவங்களில் இந்தி கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து இருவரும் போராட்டக் களத்தில் இறங்கினர். ‘எனது பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுப்பேன்’ என்று பெரியார் கூறியதெல்லாம் இந்த காலகட்டத்தில் தான். மேற்பார்வைக்கு இருவரின் உறவும் சரியானது போல் இருந்தாலும் அது ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை 1949-இல் பெரியார் மணியம்மை திருமணம் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகள் மீண்டும் முற்றி விட்டன.

 

‘பிராமணத் துவேசி’ என வர்ணிக்கப்பட்ட ஓமந்தூரார்:

இந்தி எதிர்ப்பு வலுக்கவே, ஓமந்தூரார் அரசில் கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம், தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். ஆனால் திராவிடர் கழகமே பாராட்டும் அளவுக்கு ஓமந்தூரார் அரசில் பல நல்ல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வகுப்புவாரி சட்டத்திலும், அறநிலையத் துறையிலும் பல நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருந்தார். கோயில் சொத்துக்களைப் பதிவு செய்வது, புதிய குத்தகை முறைகள், அர்ச்சகர் பணிகளை தகுதி திறமையின் அடிப்படையில் நிரப்புவது போன்ற பல தீர்மானங்களை நிறைவேற்றினார். இதன்மூலம் வைதீக நம்பிக்கை கொண்ட மற்ற சில காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். ‘கர்ப்பக்கிரகத்தில் கைவைத்த நீதிக்கட்சி காணாமலேயே போனதுபோல, நமது கட்சியும் காணாமல் போய்விடக் கூடாது’ என்றெல்லாம் என்.எஸ்.வரதாச்சாரி, வைத்தியநாத ஐயர் போன்ற பிறர் எச்சரித்தனர். காமராசரும் முடிந்தவரை ஓமந்தூராருக்கு முட்டுக்கொடுத்துப் பார்த்தார். ஆனால் எதிர்ப்புகள் வலுக்கவே அவரை இறக்கி பி.எஸ்.குமாரசாமி ராஜாவை முதல்வர் ஆக்கினார்.

 

‘கண்ணீர் துளிக்கட்சி’ என வர்ணிக்கப்பட்ட திமுக:

பெரியார் திருமணம் காரணமாக அதிருப்தி அடைந்திருந்த அண்ணாவுக்கு, பலரும் பல யோசனைகள் கொடுத்தனர். ‘கழகத் தலைமையைக் கைப்பற்றுங்கள்’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ‘சோஷியலிஸ்ட் கட்சியை உருவாக்குங்கள்’ என்றார் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்று அண்ணா முழங்கிய போது ‘எலிவலை எலிகளுக்கே’ என்று கிண்டலடித்தவர்தான் இந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இப்போது அண்ணா பக்கம் வந்திருந்தார். கடைசியாக அண்ணா ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியைத் (1949) தொடங்கினார் ‘கண்டனக்கணைகள்’ எனும் தலைப்பின் கீழ் பெரியாரின் திருமணத்தை எதிர்ப்போரின் பட்டியல் திராவிடநாடு இதழில் வெளியானது. தலைப்பு சற்று கடுமையாக இருக்கவே அதனை ‘கண்ணீர்த்துளிகள்’ என்று மாற்றி அமைத்தார் அண்ணா. இதையே பின்னாளில் அக்கட்சியைக் கிண்டல் செய்வதற்கு பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.

 

அதிருப்திக்குரிய குடியரசு தினம்:

இவ்வாறு கூறியது அண்ணா. அவரது கனவான திராவிடநாடு கிடைக்காமல், இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகிவிட்ட நிலையில், இவ்வாறு வர்ணித்தார். அச்சட்டத்தின் 29 ஆவது பிரிவு ஒரு சர்ச்சையை கிளப்பியது. ‘சாதி, மத, இன, மொழி அடிப்படையில் யாருக்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் அனுமதி மறுக்கப்பட மாட்டாது’ என்பதை அப்பிரிவு கூறுகிறது. ஆனால் ‘இட ஒதுக்கீடு’ காரணமாக செண்பகம், சீனிவாசன் ஆகிய 2 பிராமணர்களுக்கு மருத்துவம் & பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே இந்த ‘இட ஒதுக்கீட்டு ஆணை’ இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று வழக்கு தொடுத்தனர் இவர்களிருவரும். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு பிராமணர்களுக்கு சாதகமாக வரவே கொதித்தெழுந்த தி.க மற்றும் தி.மு.க.வினர் சென்னை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கும் பிராமணர்களுக்கே வெற்றி. எனவே ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் இந்தச் சட்டத்தையே மாற்ற வேண்டும்’ எனக் கூறி போராட்டக் களத்தில் இறங்கியது தி.க மற்றும் தி.மு.க. இது ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுப்பதை அறிந்த நேரு சட்ட திருத்தத்திற்கான  வேலைகளைச் செய்தார். அதன்படி ‘தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் இருந்தும் அரசை தடுக்காது’ என்று 29 ஆவது பிரிவு திருத்தப்பட்டது. இதுவே முதல் சட்டத் திருத்தம் ஆகும். இதைக் கொண்டுவந்த பெருமை சென்னை மாகாணத்தையே சேரும்.

 

முதல் பொதுத் தேர்தல் – 1952:

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்லாமல், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (விவசாய தொழிலாளர் மக்கள் கட்சி – காங்கிரஸிலிருந்து பிரிந்த டி.பிரகாசத்தினுடையது) மற்றும் இதை சேர்ந்த இரண்டு கட்சிகளான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (விழுப்புரம் ராமசாமி படையாட்சியார்) காமன்வீல் கட்சி (எம்.ஏ மாணிக்கவேல்) ஆகியவையும் தேர்தலில் பங்கு பெற்றன. காங்கிரஸில் இருந்து பிரிந்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும், அப்போது பார்வர்ட் பிளாக் என்ற கட்சியைத் தொடங்கி இருந்தார். திமுக தேர்தலில் ஈடுபடவில்லை. ஆனால் திராவிட நாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு வாக்குறுதிப் பட்டியலைத் தயாரித்து அதில் கையெழுத்திடுவோரை திமுக ஆதரிக்கும் என்ற அறிவிப்பை விடுத்தார். அதற்கு இணங்கி காமன்வீல் மற்றும் படையாச்சியார் கட்சிகள் திமுக ஆதரவைப் பெற்றன.  கையெழுத்திடவில்லை என்றாலும், ஒரு சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஆதரவளித்தது.

 

மைனாரிட்டி அரசாக வென்ற காங்கிரஸ்:

தற்போது போல் 234 தொகுதி என்றில்லாமல் அப்போதைய சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மலபார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. எனவே மொத்தம் உள்ள 376 தொகுதிகளில் பாதிக்கு மேல் 188 தொகுதிகளை்யாவது கைப்பற்றினால் தான் அறுதிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியும்.  ஆனால் காங்கிரஸ் வென்றது வெறும் 152 தொகுதிகள் மட்டுமே. மீதமுள்ள தொகுதிகளை இதர கட்சிகள் கைப்பற்றின. குமாரசாமி ராஜா ஆட்சிக் காலத்தில் நிலவிய கடும் அரிசிப் பஞ்சம் காரணமாக குடும்பம் ஒன்றிற்கு ஆறு அவுன்ஸ் (180 கிராம்) அரிசி மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியே காங்கிரசின் இந்தச் சரிவுக்குக் காரணமானது. மேலும் ஆந்திரப் பிரிவினை கோஷத்தை கண்டுகொள்ளாமல் விட்ட நேருவும்  இதற்கு ஒரு காரணம். இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் பேசக் கூடிய மொழியான தெலுங்கு பேசும் ஆந்திரர்கள் ‘ஆந்திர மகாசபை’ என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கென்று தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

சீதாராம் (அரசியல்வாதியாக இருந்து சாமியாரானவர்) என்பவர் தொடர்ச்சியாக 5 வாரங்கள் உண்ணாவிரதம் இருந்தும் நேரு எதையும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் வினோபாபாவேயின் தலையீட்டால் உண்ணாவிரதம் முடிக்கப்பட்டது. ஆகவே கோபத்தில் இருந்த ஆந்திரர்களும் காங்கிரசுக்கு எதிராக மாறி இருந்தனர். எது எப்படியோ காங்கிரஸ் இப்போது மைனாரிட்டி அரசு. இந்நிலையில் கம்யூனிஸ்ட் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ என்ற ஒன்றை உருவாக்கி டி.பிரகாசம் தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு உருவான கூட்டணியை பொருட்படுத்தாமல், தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

 

ராஜாஜி எனும் ராஜதந்திரி:

குமாரசாமி ராஜா உட்பட பல முக்கிய தலைவர்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்த  அந்த நேரத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ராஜாஜியை ஆட்சி அமைக்க அழைத்தார் காமராஜர். இவரும்  தேர்தலில் போட்டியிட்டு வென்று வரவில்லை. அப்போதைக்கு காபந்து (தற்காலிக) முதல்வராக செயல்பட்ட குமாரசாமி ராஜா மூலம் நேரடியாக மேலவை உறுப்பினராகி பின்னர் முதல்வரானார். இதையே ‘கொல்லைப்புறம் வழியாக வந்தவர்’ என்று விமர்சித்தார் பெரியார். பெரும்பான்மை திரட்ட ராஜாஜி வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கட்சிகளையும் குறிவைத்தார். அவைகளும் திமுகவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும், போட்ட கையெழுத்தையும் மறந்து காங்கிரஸில் ஐக்கியமாயின (முதல் கட்சித்தாவல் சம்பவம்). ராஜாஜி முதல்வரானார்.

 

சாமி கும்பிட சொன்ன ராஜாஜி:

குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு அனைவரையும் சாமி கும்பிட்டு மழையை வருவிக்குமாறு கேட்டுக்கொண்டார் ராஜாஜி. பெரியார், கம்யூனிஸ்ட், அண்ணா என அனைவரும் இதனை கேலிசெய்து தீர்த்தனர். ஆனால் மழையோ வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அளவுக்கு வந்து தீர்த்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ராஜாஜி ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்’ என அறிக்கை வெளியிட்டு மகிழ்ந்தார். இவருக்கு ஆதரவாக கல்கி.கிருஷ்ணமூர்த்தியும் ‘மகான் வந்தார்! மழை பொழிந்தது!’ என்றெல்லாம் வெளியிட்டார். அடுத்து அரிசிப்பஞ்சத்தை நீக்க தானியங்களை இடம் விட்டு இடம் கொண்டு செல்வதற்குப் போடப்பட்டிருந்த தடைகளை நீக்கினார். இதன் மூலம் பதுக்கல் அரிசி கடைத்தெருவுக்கு வந்தது. நியாயவிலைக் கடைகள் மூலம் போதுமான அரிசி கிடைக்குமாறு செய்தார். விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க ‘குத்தகையாளர்-பண்ணையாள் பாதுகாப்பு சட்டம்’ கொண்டு வந்தார். இவையெல்லாம் இவரின் நிர்வாகத் திறனுக்கு சிறந்த சாட்சிகள்.

 

குலக்கல்வி பிரச்சினை:

அடுத்ததாக அரசியல் சாசன சட்டப்படி 1960-க்குள் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி கொடுத்திருக்க வேண்டும் என்பதை நிறைவேற்றும் பொருட்டு ஒரு திட்டம் கொண்டு வந்தார். தற்போது பள்ளிக்கு வரும் குழந்தைகள் 42%. இதனை அப்படியே இரட்டிப்பாக்க பள்ளிகளில் போதிக்கும் நேரத்தை இரண்டு ஷிப்ட் ஆகப் பிரித்தார். இதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமலேயே தற்போதைய எண்ணிக்கையை விட இருமடங்கு குழந்தைகள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கல்வி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தொழிலை கற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இங்குதான் பிரச்சினை முளைத்தது . இதனைக் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று வர்ணித்தார் பெரியார். அதற்கேற்றார்போல்  ராஜாஜி சலவைத் தொழிலாளர் கூட்டமொன்றில், ‘சாதிமுறை நல்லதுதான். அனைவரும் அவரவருடைய குலத்தொழிலைக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்பது போல் பேசியுள்ளார். இதற்கான எதிர்ப்பு ஒருபுறமிருக்க ஆந்திரர்கள் போராட்டம் ஒரு புறம் வெடித்தது.

 

ஆந்திரப் பிரச்சினை:

‘ஆந்திர தேசம் காவல; அரவ ராஜாஜி சாவல’ போன்ற கோஷங்கள் மீண்டும்  வலுக்கத் தொடங்கின. பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக இருந்த ராஜாஜி ஆந்திரப் பிரிவினைக்கு எதிரியாகவே இருந்தார். இம்முறை உண்ணாவிரதம் இருந்தவர் பொட்டி ஸ்ரீராமுலு. 58 நாட்கள் தொடர்ந்த இவரின் உண்ணாவிரதம் கடைசியில் அவருடைய மரணத்தில் சென்று முடிந்தது. கொதிப்படைந்த ஆந்திரர்கள் கல்வீச்சு, கலவரம், ரயில் எரிப்பு போன்றவற்றில் இறங்கினர். கடைசியாக ‘ஆந்திர மாநிலம் விரைவில் உருவாக்கப்படும்’ என்ற அறிவிப்பை சோகத்துடன் நேரு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ‘சென்னை நகர் முற்றிலுமாக ஆந்திராவுக்கு வேண்டும். இல்லையென்றால் அதில் பாதியான வடசென்னையாவது வேண்டும். அதுவும் இல்லையென்றால் இரண்டுக்கும் பொதுவான மாநிலமாக அமையுங்கள். எதுவுமே முடியாதபட்சத்தில் யாருக்கும் இல்லாமல் தன்னாட்சி பெற்ற பகுதியாக அறிவியுங்கள்’ என்றெல்லாம் சொல்லி சேட்டை செய்து கொண்டிருந்தார் நமது ஆந்திர கேசரி டி.பிரகாசம்.

 

எல்லைப் போராளி மா.பொ.சி:

‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டத்தைக் காட்டிலும் இப்பட்டமே இவருக்குப் பொருத்தமானது. சென்னை மாகாணத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாத மா.பொ.சி ‘வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழ்நாடு’ என்பதை தக்க சான்றுகளுடன் மேடைகளில் முழங்கினார். அப்போது வடவேங்கடம் (திருப்பதி) ஆந்திரா வசமும், தென்குமரி (கன்னியாகுமரி) கேரளா வசமும் இருந்தது. ‘தலையைக் கொடுத்தாவது தலைநகரை காப்போம்! காலைக் கொடுத்தாவது  கன்னியாகுமரியை மீட்போம்!’ என்றெல்லாம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் இறங்கினார். மேலும்  சென்னை மேயராக இருந்த செங்கல்வராயனின் துணையுடன் வில், புலி, மீன் (மூவேந்தர்களின் சின்னம்) இவற்றைக் கொண்ட ஒரு கொடியை உருவாக்கி அதனை சென்னை மாநகராட்சியின் கொடியாக அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். இதன்மூலம் சென்னை தமிழ்நாட்டுக்கு சொந்தமானது என்பது பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேரு, புதிய ஆந்திர மாநிலம் அக்டோபர்-1,1953 இல் உருவாகும் என்றும், அதன் தலைநகர் அதற்குள்ளேயே அமையும் என்றும் அறிவித்தார். இதன் மூலம் சென்னை தமிழ்நாட்டுக்கே என்பது உறுதியானது.

 

மும்முனைப் போராட்டம்:

மூன்று முக்கியப் பிரச்சினைகளை எதிர்த்து மும்முனை போராட்டம் நடத்துவதற்கான தேதியை அறிவித்தார் அண்ணா.

1.குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து ராஜாஜி வீட்டுமுன் ஈ.வே.கி.சம்பத் தலைமையில் போராட்டம்.

2.கல்லக்குடி என்ற ஊர் டால்மியாபுரம் என மாற்றப்பட்டிருந்தது. ‘வடநாட்டு நிறுவனத்தின் பெயர் எங்கள் ஊருக்குத் தேவையில்லை’ என கருணாநிதி தலைமையில் போராட்டம்.

3. மா.பொ.சி கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட சித்தூரில் மீட்கும் போராட்டத்தில் திமுக கலந்துகொண்டது. அதற்கு நேரு ‘நான்சென்ஸ்’ என்று சொன்னதை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா உட்பட சில முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் சொன்ன தேதியில் அடுத்த கட்டத்தலைவர்கள் போராட்டத்தை நடத்தினர். கருணாநிதி ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து போராடிய போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு அப்பாவி உயிர்கள் பலியாயின.

 

வந்தார் காமராசர்:

குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தனது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வலுத்துக் கொண்டே செல்லவே பதவியை இராஜினாமா செய்தார் ராஜாஜி. அவருக்கு ஆதரவாக, ‘பதவியா! மானமா! என்றபோது மானத்தை தேர்வு செய்தார் ராஜாஜி’ என்று தனது செங்கோல் பத்திரிகையில் எழுதினார் மா.பொ.சி. ராஜாஜிக்கு திரைமறைவில் கொடுக்கப்பட்ட தொல்லைகளை இவ்வாறு நாசூக்காக வெளிப்படுத்தினார். ராஜாஜி இடத்தை நிரப்ப வேறு யாரை பரிந்துரை செய்தாலும் நேரு ஏற்கவில்லை. ஆகவே தாமே முதல்வராக முடிவு செய்தார் காமராஜர். கொல்லைப்புறம் வழியாக வர விரும்பாததால் குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். குலக்கல்வித் திட்டத்தை நீக்கினார். ஒரு பிராமணர் கொண்டு வந்த திட்டத்தை சூத்திரர் நீக்கியது பெரியாருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ‘குலக்கொழுந்தே!  குணாளா’ என்றெல்லாம் பாராட்டினார் அண்ணா.

 

காமராசர் ஆட்சிக்கால நிகழ்வுகள்:

பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு மற்றும் காமராசர் ஆகியோரின் சுய விருப்பப்படி தன்னார்வலர்களின் நிதி கொண்டு ‘மதிய உணவுத்திட்டம்’ துவங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக இதனை ஐந்தாண்டுத் திட்டங்களில் ஒன்றாக இணைத்து அரசு நிதியுதவி கிடைக்குமாறு செய்தார் காமராசர்.

ஆந்திரப் பிரிவினையைத் தொடர்ந்து பலரும் தங்களுக்கென்று தனி மாநிலம் கேட்கவே ‘மாநில சீரமைப்பு ஆணையம்’ ஒன்றை அமைத்து அனைவரின் பரிந்துரைகளையும் ஆராயச் ஞசொன்னார் நேரு. இவ்வாணையம் வெளியிட்ட அறிக்கையின்படி தமிழ்நாடு, கேரளம் என மொழிவாரி மாநிலங்கள் பகுக்கப்பட்டன. மேலும் தமிழ்நாட்டுக்கு ‘சென்னை ராஜ்ஜியம்’ (மெட்ராஸ் ஸ்டேட்) என்றே பெயர் வைக்க வேண்டுமென ஆணையம் வலியுறுத்தியது. இதனை எதிர்த்தும் எல்லைகளைப் பிரிப்பதில் ஏற்பட்ட குழப்பங்களை எதிர்த்தும் போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் வங்க முதல்வர் பி.சி.ராய் இது போன்ற சிறு சிறு மாநிலங்களாகப் பிரிப்பதற்கு பதில் கிழக்கு, மேற்கு, உத்தர, மத்திய, தட்சண என்று 5 ஆகப் பிரிக்க யோசனை சொன்னார். இதை எதிர்த்தும் போராட்டம் வெடித்தது. ஆனால் இது மத்திய அரசை மிகவும் கவரவே அமிர்தசரஸில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள, கர்நாடக முதல்வரைச் சந்தித்தார் சி.சுப்பிரமணியம். அவர்களிடம் தட்சிணப்பிரதேசம் உருவான பிறகு அதன் முதல்வராக காமராஜர் இருக்க சம்மதம் பெற்றுத் திரும்பினார். அப்போது பெரியாரிடம் இருந்து வந்த தந்தி ஒன்று காமராஜரை பின் வாங்க வைத்தது. அதில் நம் மொழியினர் மீது மற்ற மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதற்கான நூதன வாய்ப்பே இது என எச்சரித்திருந்தார். காமராஜர் பின்வாங்கவே தட்சிணப்பிரதேசம் தேவையில்லை என்று முடிவு செய்தார் நேரு.

அடுத்து காங்கிரஸிலிருந்து பிரிந்த சங்கரலிங்கனார் காங்கிரஸில் இழையோடிய குளறுபடிகளை எதிர்த்தும், சென்னை ராஜ்யம் என்ற  பெயரை எதிர்த்தும் 12 கோரிக்கைகளை உள்ளடக்கிய பட்டியலை அரசுக்கு அனுப்பி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். காமராஜர் நினைத்திருந்தால் தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையையாவது  நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் ஏனோ இதைக் கண்டுகொள்ளவில்லை.  கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி, அண்ணா என பலர் வற்புறுத்தியும் உண்ணாவிரதத்தை நிறுத்தாமல் இறுதியில் மரணமடைந்தார் சங்கரலிங்கனார். இது காமராஜர் மீது விழுந்த ஒரு கறையானது.

 

மீண்டும் ஜெயித்தார் காமராஜர் – தேர்தல் 1957:

இந்தத் தேர்தலில் புதுமுகமாக இரண்டு கட்சிகள் களம் இறங்கின. ஒன்று திமுக. மற்றொன்று காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி. காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்ட பல மூத்த தலைவர்கள் தனியாகப் பிரிந்து இதனை ஆரம்பித்தனர். ஏற்கனவே தனியாக பிரிந்து தனிக்கட்சி நடத்திக்கொண்டிருந்த முத்துராமலிங்கத்தேவர் இதற்கு ஆதரவு அளித்தார். மாகாணப் பிரிவினைக்குப் பின், சட்டமன்றத் தொகுதிகளின்  எண்ணிக்கை 205 ஆனது. இதில் பாதிக்கு மேல் 151 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது காங்கிரஸ். பிரச்சாரத்தின் போது  ‘ஒரு பாகிஸ்தான் போதும். திமுக ஆட்சிக்கு வந்தால் பிராமணர்களை விரட்டிவிட்டு  திராவிடநாடு அமைப்பார்கள்’ என்று கூறினார் நேரு. பெரியாரோ காமராஜருக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார். மேலும் எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பல திரைநட்சத்திரங்கள்  ஜொலிப்பதால்  ‘கூத்தாடிக் கட்சி’ என்ற விமர்சனமும் எழுந்தது.

அத்தனை விமர்சனங்களையும் மீறி 15 இடங்களைக் கைப்பற்றி இருந்தது திமுக. அதை விட ஒன்று அதிகமாக 16 இடங்களைக் கைப்பற்றிய ‘ காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி’ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேர்தலுக்குப் பின் இது ‘இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்’ என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. முத்துராமலிங்கத்தேவர் திருவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதி & முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார்.

 

முதுகுளத்தூர் கலவரம்:

 

தேவர் காங்கிரசுக்கு எதிரானவர். அப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களோ காங்கிரஸுக்கு ஆதரவானவர்கள். தேர்தலில் தேவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சாதி ரீதியிலும், அரசியல் ரீதியிலும் அப்பகுதியில் கலவரங்கள் வெடித்தன. அவர் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக முதுகுளத்தூரை செய்தார்.  இதனால்  நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் தேவர் ஆதரித்த சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். ஆகவே கலவரம் ரணகளமானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியைக் கொண்டுவரும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பணிக்கர் இருதரப்பு ஆட்களையும் அழைத்துப் பேசினார். அப்போது தேவரின் முன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வந்து நின்றார் இமானுவேல்சேகரன் (பள்ளர் இனம்). ராணுவத்தில் பணியாற்றிய இவர் பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருந்தார். காமராசர் முதல்வரானவுடன் தேவரை காங்கிரஸில் இணைக்க தூது அனுப்பினார். ஆனால் அது தோல்வியடையவே கக்கன் மூலம் இமானுவேலை காங்கிரஸில் இணைத்திருந்தார். எனவேதான் தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு காங்கிரஸ் பக்கம் விழுந்தது.

இப்போது பணிக்கர் கலவரப் பகுதிகளில் அமைதியைக் கொண்டுவரும் பொருட்டு துண்டுப்பிரசுரம் வெளியிடும் யோசனையைச் சொன்னார். இதை எதிர்த்து தேவர், ‘தாழ்த்தப்பட்டோர் பகுதியில்தான் கல்வி அறிவே கிடையாதே’ என்று சொன்னார். உடனே இமானுவேல், ‘புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால் யாருக்கு கல்வியறிவு இல்லை என்பது தெரிந்து விடும்’ என்றார். இதைத்தொடர்ந்து நேரடி மோதல்கள் தொடங்கின. எனவே  பணிக்கர் மாற்று யோசனையாக ‘கூட்டு அறிக்கை’ வெளியிடுவது பற்றிச்  சொன்னார். இதற்கும் தேவர், ‘இவன்  தனக்குச் சமமான தலைவனா?’ என்று கேட்டார். உடனே  இம்மானுவேல், ‘நான் உங்களுக்குச் சமமானவனா இல்லையா என்பது மக்களுக்குத் தெரியும்’ என்றார். இதைத்தொடர்ந்தும் மோதல்கள் வலுக்கவே பணிக்கர், இருவரிடையேயும் தனித்தனியே கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்தார். பின்னர் 33 வயதே நிரம்பிய இம்மானுவேல், பரமக்குடி என்ற இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தேவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூவருக்கு மட்டும் தூக்கு தண்டனை கிடைத்தது. தேவர் விடுதலையானார். இதனால் ஏற்பட்ட தொடர் கலவரங்கள் காரணமாக, காமராஜர் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தது கம்யூனிஸ்ட். ஆனால் தீர்மானம் தோல்வியுற்றது.

 

உள்ளூரில் செல்வாக்கை அதிகரித்த திமுக:

திமுக.வே சும்மா இருந்தாலும் காங்கிரஸ் சும்மா இருக்க விடாது. முன்னாடி ‘நான்சென்ஸ்’ என்று திட்டிய நேரு, இப்போது பெரியாரை ‘பைத்தியக்காரர்’ என்றும், இந்தி எதிர்ப்பு  ‘சிறுபிள்ளைத்தனம்’ என்றும் விமர்சித்து திமுகவினரை உசுப்பேற்றினார். ஆகவே நேரு  சென்னை வந்தபோது கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது நடந்த தடியடி மற்றும் கலவரத்தில் 2 அப்பாவி உயிர்கள் பலியாயின. கொஞ்சம் கொஞ்சமாக திமுகவுக்கு உள்ளூரில் செல்வாக்கு உயர்ந்தது. இது உள்ளாட்சித் தேர்தலிலும் வெளிப்பட்டது. 100 இடங்களில், காங்கிரஸ் 36 இடங்களிலும், திமுக 45 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனாலும் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட குறைந்தது 50 இடங்களையாவது கைப்பற்றி இருக்க வேண்டும்.

அந்நிலையில்  கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி திமுகவுக்கு கைகொடுத்தார். காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நோக்கில் திமுகவை ஆதரித்தார். ஆகவே திமுகவை சேர்ந்த அ.பொ.அரசு மேயராகவும், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிவசங்கரன் துணை மேயராகவும் ஆனார்கள். அடுத்ததாக ‘பள்ளிகளில் ஹிந்தி, மாநில சட்டமன்றங்களில் ஹிந்தி, மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி, வேலைவாய்ப்பில் சேர தகுதி ஹிந்தி’ என எங்கும் ஹிந்தியை கட்டாயமாக்கும் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து மாபெரும் மொழிப்போர் மீண்டும் வெடித்தது. இது பொது மக்களையும், மாணவர்களையும், திமுகவினரையும் அதிக அளவில் இணைத்தது. கடைசியாக நேரு ‘ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடரட்டும்’ என்று கூறிய அறிவிப்பின்படி மொழிப்போர் வேகம்  சற்று தணிந்தது.

 

அண்ணாவின் தம்பிகளுக்குள் பிரச்சனை:

உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து  நடந்த வெற்றிவிழாவில் சிறப்பாக ‘வேட்பாளர் தேர்வு’ வேலையைச் செய்த கருணாநிதிக்கு அண்ணா கணையாழி (மோதிரம்) ஒன்றை பரிசாக அளித்தார். இது கட்சிக்குள் மாபெரும் புயலைக்  கிளப்பியது. கண்ணதாசன் வெளிப்படையாகவே அவருடைய ‘வனவாசம்’ என்ற நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதிக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்காமல்  செய்வதற்கான அனைத்து வேலைகளையும் சம்பத் செய்துகொண்டிருந்தார். அண்ணா பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார். ஆனால் சம்பத்தோ ‘அண்ணாவின் மன்னன்’ என்ற கட்டுரையை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்கள், பூசல்கள், குழப்பங்கள் காரணமாக தமது அவைத்தலைவர் பதவியை உதறினார் சம்பத். பின்னர் தன்னுடைய நண்பர் கண்ணதாசன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். பாரதிதாசன் போன்றோர் சம்பத்துக்கு திமுகவை விட்டு வெளியேறுமாறு அடிக்கடி தூபம் போட்டுக்கொண்டே இருந்தனர். சம்பத் நினைத்திருந்தால் பெரியாருடைய கட்சி, சொத்துக்கள் என அனைத்தையும் அவர் வசப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு தன் பின்னால் வந்த தம்பியின் தற்போதைய நிலை கண்டு மிகுந்த வருத்தமடைந்தார் அண்ணா. கடைசியாக சம்பத் திமுகவிலிருந்து பிரிந்து ‘தமிழ் தேசியக் கட்சி’ என்ற ஒன்றை உருவாக்கினார். பின்னாளில் இக்கட்சி காங்கிரசுடன் இணைந்து காணாமலேயே போய்விட்டது.

 

மீண்டும் ஜெயித்த காமராஜர் – தேர்தல் 1962:

இந்தத் தேர்தலிலும் புதுமுகமாக இரண்டு கட்சிகள் களமிறங்கின. ஒன்று சம்பத் தொடங்கிய கட்சி, மற்றொன்று ராஜாஜியின் ‘சுதந்திரா கட்சி’. இதிலும் எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் ஜெயித்து காமராஜர் ஆட்சி அமைத்தார். சென்ற தேர்தலில் 15 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக, இந்த தேர்தலில் 50 தொகுதிகளை வென்று அசத்தியிருந்தது. ஆனால் கட்சியால் இந்த வெற்றியைக் கொண்டாட முடியாதபடி  அண்ணா தனது சொந்த தொகுதியான காஞ்சிபுரத்தில் நடேச முதலியாரிடம்  தோற்றிருந்தார். அவர் மட்டுமல்ல, சென்ற தேர்தலில் ஜெயித்த 15 பேரில் 14 பேர் காமராஜர் வைத்த குறியில் சிக்கி தோற்றிருந்தனர். தப்பியது கருணாநிதி மட்டுமே. சம்பத் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. சட்டமன்றத்திற்குச் செல்ல முடியாத அண்ணா, தி.மு.க.வினரால் நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட அண்ணா:

பாராளுமன்றத்திற்குச் சென்ற அண்ணா ‘திராவிடநாடு’ பற்றி பேசியது எங்கும் பரவியது. இதைக் கொஞ்சமும் விரும்பாத நேரு சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அந்நிலையில்தான் இந்தியா – சீனா போர் மூண்டது. அப்போது  திராவிடநாடு பற்றி பேசாமல் காங்கிரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டார் அண்ணா. ‘வீடு இருந்தால்தானே கூரை மாற்ற முடியும்’ என்ற விளக்கமும் அளித்தார். ஆனாலும் நேருவின் கோபம் குறையவில்லை. உலக நாடுகளின் கண்டனம் வலுக்கவே போரை நிறுத்தியது சீனா. அதைத்தொடர்ந்து  ‘பிரிவினைவாத தடைச் சட்டம்’ என்ற ஒன்றை இயற்றினார் நேரு. அதன்படி ‘பிரிவினை கோரும் கட்சிகள் தேச விரோத இயக்கமென தடை செய்யப்படும்’ என்று அறிவித்தார். இதை எதிர்த்து திமுக போராடினால் தடை செய்யலாம் என காத்துக்கொண்டிருந்த நேருவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அண்ணா தனது உயிர்நாடிக் கொள்கையான ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டார். ‘மாநிலங்களுக்கு இயன்றளவு கூடுதல் அதிகாரம்’ என திருத்தம் கொண்டுவந்து கட்சியைக் காப்பற்றினார்.

 

மார்க்சிஸ்ட் ஆகப் பிரிந்த கம்யூனிஸ்டுகள்:

கம்யூனிஸ காற்று வீசுகின்ற சீனா இந்தியா மீது போர் தொடுத்த சமயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் அதை எதிர்த்தனர். மறு பிரிவினரோ இந்திய பூர்ஷ்வாக்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்கும் முயற்சியே இது என ஆதரித்தனர். கட்சிக்கு வழிகாட்ட வேண்டிய சர்வதேசத் தலைமையும் சோவியத் கம்யூனிஸ்ட் மற்றும் சீன கம்யூனிஸ்ட் என இரண்டாகப் பிரிந்திருந்தது. ஆகவே சீனாவை எதிர்ப்போர் இந்திய கம்யூனிஸ்ட் (காங்கிரசுக்கு ஆதரவாக) என்ற பெயரிலும், சீனாவை அதரிப்போர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (காங்கிரஸுக்கு எதிராக) என்ற பெயரிலும் செயல்படத் தொடங்கினார். இதுவரை இடதுசாரிகள் என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், இதைத்தொடர்ந்து வலது கம்யூனிஸ்ட்(சி.பி.ஐ) , இடது கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) என்று அழைக்கப்பட்டனர்.

 

பக்தவச்சலத்திற்கு வழிவிட்டு விலகிய காமராஜர்:

திருவண்ணாமலை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திமுகவிடம் தோற்றிருந்தார். திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்த காமராஜர், காங்கிரஸை மக்களிடம் அதிகளவில் கொண்டு செல்ல புதிய திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி ‘ஆட்சிப் பொறுப்புகளில் இருக்கும் மூத்த காங்கிரஸ்காரர்கள் கட்சியில் இருக்கின்ற இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு, கட்சி  வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்பதே K-Plan என்கிற ‘காமராஜர் திட்டம்’. இதன் முதல்படியாக தனது பதவியையே ராஜினாமா செய்து பக்தவச்சலத்தை முதல்வராக்கினார் காமராசர். நேருவும் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூற, பின் காமராஜரின் வற்புறுத்தலின்படி அவ்வாறு செய்யவில்லை. பின் காமராசர் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இன்றுவரை இந்தப் பதவிக்கு வேறு எந்தத் தமிழரும் வரவில்லை. 1964-ல் நேரு மறைவுக்குப்பின் குல்சாரிலால் நந்தா தற்காலிக பிரதமராக செயல்பட்ட போது அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு காமராஜரிடம் வந்தது. அப்போது அவரின் எண்ணத்தில் இருந்த மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூன்று பேரில் சாஸ்திரியை தேர்வு செய்தார் காமராசர். சாஸ்திரியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது அரியலூரில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்தன. விபத்துக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இந்த நல்ல உள்ளமே அவரை பிரதமராக தேர்வு செய்ய வைத்தது காமராஜருக்கு.

 

ஆட்சி மொழிச் சட்டம்:

‘ஹிந்தியே ஒரே ஆட்சி மொழி. வேண்டுமானால் ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனக் கூறும் அரசியல் சாசனத்தின் 17-வது பிரிவை நீக்கக் கோரி திமுக போராட்டங்களை அறிவித்தது. இதைத்தொடர்ந்து கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னசாமி எனும் திமுக தொண்டர் தற்செயலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் பக்தவச்சலதைப் பார்க்க நேர்ந்தபோது அவரிடம் ஹிந்தி திணிப்பு பற்றி கேட்டார். அவரோ அலட்சியப் பார்வையை வீசி விரைந்து சென்றுவிட்டார். கேள்வி கேட்டவரை காவலர்கள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சின்னசாமி ‘ தமிழே! நீ வாழ நான் துடிதுடித்து சாகிறேன்’ என கடிதத்தை எழுதி விட்டு தீக்குளித்து இறந்தார். சாகும் போது அவரின் வயது 27. அவருக்கு மனைவியும், திராவிடச் செல்வி எனும் 2 வயது மகளும் இருந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து திமுக கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் போராட்டக் களத்தில் இறங்கினர். ராஜாஜி கூட திமுகவுக்கு ஆதரவாக இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தில் இறங்கினார்.

இது நிகழ்ந்து ஒரு வருடம் கழிந்த நிலையில்  இச்சட்டத்தை அமல்படுத்தும் குடியரசு தினத்தை (1965)  துக்க நாளாக அனுசரிக்க அறிவித்தார் அண்ணா. அதற்கு முந்தையநாள் மாணவர்கள் போராட்டம் நடத்தது. ‘பங்கம் விளைந்திடில் தாய்மொழிக்கே உடற்பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்’ எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி போராட்டங்களில் குதித்தனர் மாணவர்கள். கடிதத்தின் மூலம் அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தார் ம.நடராசன் எனும் தஞ்சை சரபோஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர் (இவரே சசிகலாவின் கணவரானவர்) . ஒரு சிலர் இந்தி புத்தகங்களை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். 17 ஆவது பிரிவு சட்ட நகலை எரித்ததாகக் கூறி இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் (இவர்களே பின்னாளில் சபாநாயகரான கா.காளிமுத்து மற்றும் திரைப்படக் கலைஞரான நா.காமராசன்).

மேலும் குடியரசு தின அலங்கார வளைவு ஒன்று கண்ணில் தென்பட அதை அடித்து நொறுக்கினர். காவலர்களோ மாணவர்களை கைது செய்து உள்ளே தள்ளிக் கொண்டே இருந்தனர். இன்னும் சிலர் கோட்டை முன்பு நின்று கொண்டு ‘முதல்வரைச் சந்திக்காவிடில் கல்லூரிக்குச் செல்ல மாட்டோம்’ என ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்கு அலட்சியத்தின் உச்சமாக ‘பரவாயில்லை, 5 கோடி மிச்சம்’ என்றார் முதல்வர் பக்தவச்சலம். கடைசி வரை மாணவர்களை சந்திக்கவே இல்லை. குடியரசு நாள் அதிகாலை சிவலிங்கம் என்ற இளைஞர் (திருமணமாகாதவர்) ஹிந்தியை எதிர்த்து தீக்குளித்தார்.  அவர் இறந்த மறுநாள் விருகம்பாக்கத்தில் சேர்ந்த அரங்கநாதன் எனும் திமுக தொண்டர் (3 குழந்தைகளுக்கு தகப்பன்) கடிதம் எழுதிவிட்டு தீக்குளித்து மாய்த்துக் கொண்டார். இதற்கு முதல்வர் பக்தவச்சலம், ‘அவர்களுக்கு வயிற்று வலியாக இருக்கலாம் அல்லது யாரேனும் நரபலி கொடுத்திருக்கலாம்’ என மீண்டும் அலட்சியமாக பதில் சொன்னார். பல்வேறு தீக்குளிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி ஊர்வலம் சென்றபோது நடந்த போலீஸ் தடியடியில் ராஜேந்திரன் என்ற மாணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கல்லூரிகளுக்கு கால வரையறையற்ற விடுமுறை அளித்தார் முதல்வர் பக்தவச்சலம்.

ஆனால் ஊருக்குச் சென்ற மாணவர்களோ பட்டி தொட்டி எங்கும் பரவி பள்ளி மாணவர்களை போராட்டங்களில் இணைத்தனர். என்ன செய்தும் அடக்க முடியாத மாணவர்களை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டார் முதல்வர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அண்ணா போராட்டத்தை நிறுத்த வேண்டினார். பெரியாரோ ‘திமுகதான் மாணவர்களைத் தூண்டி விடுகிறது. திமுகவையும் சுதந்திரா கட்சியும் தடை செய்யுங்கள்’ என்றார். ஆனால் தன்னெழுச்சியாக போராடிய மாணவர்களோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் மாணவர் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் அறிவித்தும் போராட்டத்தை நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன. கூடலூரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 28 உயிர்கள் பலியாயின. கொத்துக்கொத்தாக அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  மூடிக்கிடந்த கல்லூரிகளைத் திறந்து தேர்வுகளை நடத்தத் தொடங்கியது அரசாங்கம். கடைசியாக மாணவர் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானது.

 

சாஸ்திரி மறைந்தார், இந்திரா வந்தார்:

மொழிப்போர் சற்று தணிந்த நிலையில் தர்மபுரி இடைத்தேர்தல் வந்தது. ‘கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்’ என்று காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் பெரியார். ‘பூனூலை பிடித்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, உதயசூரியனுக்கு முத்திரையிடுங்கள்’ என்று திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் ராஜாஜி. இந்தி எதிர்ப்பு விஷயத்தில் திமுகவுடன் இணைந்திருந்தார் ராஜாஜி. ஆனால் வெற்றியோ காங்கிரஸ் வேட்பாளர் பக்கம் வந்து விழுந்தது. இந்த நேரத்தில்தான் காஷ்மீரின் பாரமுல்லா பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி போர் மூண்டது. திமுக சாஸ்திரி அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்தது. போர் உச்சத்தை நெருங்கிய நிலையில் ரஷ்ய பிரதமர் கோசிஜின் தலையீட்டால் தாஷ்கண்ட் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் சாஸ்திரியும் பாகிஸ்தான் பிரதமர் ஆயுப்கானும் கலந்து கொண்டு சமரச உடன்படிக்கை ஏற்பட்டது. இது முடிந்து படுக்கைக்கு சென்ற சாஸ்திரிக்கு நள்ளிரவு 12 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் பிரிந்தது. மீண்டும் பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு காமராசர் வசம் வந்தது. குல்சாரிலால் நந்தா தற்காலிக பிரதமரானார். இந்திராகாந்தி மீது கொண்ட அதிக மதிப்பின் காரணமாக அவரை பிரதமராக்க முடிவு செய்திருந்தார் காமராஜர். ஆனால் மூத்த தலைவர் மொரார்ஜி தேசாய் ‘தனக்கே பதவி’ என கேட்க ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே வாக்கெடுப்பு நடந்தது. காமராஜர் ஆதரவு பெற்ற இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

 

ஆட்சியைப் பிடித்த திமுக – தேர்தல் 1967:

பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் காங்கிரசை எதிர்த்து ‘ஜனநாயக முற்போக்குக் கூட்டணி’ என்ற ஒன்று திமுக தலைமையில் உருவானது. திமுக, சுதந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், மூக்கையா தேவரின் பார்வர்ட் பிளாக், தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர் கட்சி’, மா.பொ.சியின் ‘தமிழரசு கழகம்’ மற்றும் பிரஜா சோஷியலிஸ்ட் ஆகிய எட்டு கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கின. மக்கள் மனதைக் கவரக்கூடிய முதல்வராக பக்தவத்சலம் செயல்படாத காரணத்தால் இம்முறை முதல்வர் வேட்பாளராக காமராஜரே இறங்கி  விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. அண்ணாவும் எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடாமல், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.  ‘எட்டு நொண்டிகளைக் கொண்ட இந்த கூட்டணியை எதிர்த்து படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்றார் காமராசர். இதற்கு ராஜாஜி ‘படுப்பது நிச்சயம். ஆனால் ஜெயிப்பது சாத்தியமில்லை’ என்றார். உண்மையில் படுத்துக்கொண்டே ஜெயித்தவர் எம்ஜிஆர்தான்.

பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இயங்கிய எம்ஜிஆர் அவரது மணப்பாக்கம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது எம்.ஆர்.ராதா மற்றும் கே.கே.என்.வாசு ஆகிய இருவர் வந்தனர்.  அவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருந்த எம்ஜிஆர் திடீரென அலறல் சத்தத்துடன் காதைப் பிடித்துக் கொண்டே ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்தார். சில நிமிடங்களில் நெற்றிப் பொட்டிலும் தோளிலும் ரத்தக்கறையுடன் எம்.ஆர்.ராதா ஓடிவந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எம்.ஆர்.ராதா பெரியார் சொன்னார் என்பதற்காக இந்த தேர்தலில் காமராஜருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காமராஜரை கொலை செய்ய எம்ஜிஆர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக அவருடைய நாத்திகம் என்ற பத்திரிகையில் எழுதி இருந்தார் ராதா. ஆனால் எம்ஜிஆருக்கு காமராஜர் மீது அப்படி எந்த வெறுப்பும் இருந்ததாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் திமுகவில் இருந்துகொண்டே,  ‘காமராஜர் தான் என்னுடைய தலைவர். அண்ணா என்னுடைய வழிகாட்டி மட்டுமே’ என்றெல்லாம் கூறி சர்ச்சையைக் கிளப்பியவர் எம்ஜிஆர். எது எப்படியோ. யார் யாருக்காக யாரைக் கொலை செய்ய முயற்சித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பிரச்சார நேரத்தில் கழுத்தில் கட்டுடன் கைகூப்பி இருந்த எம்ஜிஆர் புகைப்படம் காண்போர் கண்களைக் குளமாக்கியது.

திமுகவின் வாக்குறுதியான ‘படி அரிசி திட்டம்’ என்பதை தினத்தந்தியில் விளம்பரப்படுத்தி வாக்கு சேகரித்தார் சி.பா.ஆதித்தனார். ‘திமுக ஆட்சிக்கு வந்தால் உச்சிக் குடுமியை ஒன்றும் அறுக்க மாட்டார்கள், துணிந்து வாக்களியுங்கள்!’ என்று பிராமணர்களின் வாக்குகளை சேகரித்தார் ராஜாஜி. இதெல்லாம் சேர்ந்து திமுகவுக்கு பலத்த வெற்றியை அள்ளித் தந்தது. காமராசரோ அவருடைய சொந்த தொகுதியான விருதுநகரில் திமுக வேட்பாளர் சீனிவாசனிடம் (மொழிப்போரில் மாணவர் அமைப்பு தலைவன்) தோற்று இருந்தார்.  ‘மக்கள் மாற்றத்தை விரும்பி திமுகவுக்கு வாக்களித்து உள்ளனர். அதை நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார் காமராசர். ஆனால் பக்தவச்சலமோ ‘தமிழ்நாட்டில் வைரஸ் பரவி விட்டது. ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்’ என்றார். எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் சார்பில் பி.ஜி.கருத்திருமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றி பெற்றவுடன் பெரியாரை சந்தித்து ஆசி பெறச் சென்றார் அண்ணா. பெரியாரும் மனதார வாழ்த்தி அனுப்பினார். அண்ணா எந்த ஒரு சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடாத காரணத்தால் முதல்வராக முடியவில்லை. ஆகவே அவர் ஜெயித்த மக்களவை தொகுதியை ராஜினாமா செய்து மேலவை உறுப்பினராகி பின்னர் முதல்வரானார். இதே முறையைத்தான் முன்பு ராஜாஜி பின்பற்றினார். ஆனால் அப்போது ‘கொல்லைப்புறம் வழியாக வந்தவர்’ என்று எழுந்த விமர்சனம் இப்போது எதுவும் எழவில்லை. திமுக அமைச்சரவை பதவி ஏற்கும் போது முதன்முறையாக ‘உளமார உறுதி கூறுகிறேன்’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதற்கு முன்புவரை கடவுளின் பெயரால் மட்டுமே உறுதிமொழி எடுப்பர்.

 

களையிழந்த காங்கிரஸ்:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வியுற்றாலும் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று மீண்டும் இந்திரா காந்தியே பிரதமரானார். புதிய அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் காமராஜரை கலந்து ஆலோசிக்கவில்லை இந்திரா. மொரார்ஜி தேசாயை துணை பிரதமராக்கும் விஷயத்தில் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்ட இந்திரா மூத்த தலைவர்களை மதிக்காமல் நடந்து கொண்டார். K-Plan திட்டமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு தவிர ஆறு மாநிலங்களில் காங்கிரஸ்  தோல்வியுற்றிருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான காலக்கெடுவும் முடிந்திருந்தது. இதில் எது காமராஜரை பாதித்தது என்று தெரியவில்லை. அவர் வகித்த பதவிக்கு நிஜலிங்கப்பாவைக் கொண்டுவந்து மாநில அரசியலில் ஈடுபட்டார் காமராஜர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி நாயுடுவும் விடுவிக்கப்பட்டு அந்த இடத்துக்கு சி.சுப்பிரமணியம் வந்திருந்தார்.

 

அண்ணாவின் ஆட்சி:

திமுக ஆட்சிக்குப் புதிது என்பதால் ‘முதல் ஆறு மாதங்களுக்கு எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது’ என்று காங்கிரஸ்காரர்களுக்குக் கட்டளையிட்டு மிகுந்த நாகரீகத்துடனும் நடந்து கொண்டார் காமராஜர். அண்ணா ஆட்சியில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அரிசிக் கடத்தல் தடுக்கப்பட்டது. படி அரிசித் திட்டம் சென்னையிலும் கோவையிலும் தொடங்கப்பட்டது. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக மற்ற இடங்களில் விரிவுபடுத்த முடியவில்லை. அரசாங்க அலுவலகங்களில் இருக்கும் கடவுளின் படங்கள் நீக்கப்பட்டு தேசத் தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டது. தமிழ்நாடு பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டது. 1953-ல் சென்னை உயர்நீதிமன்றம், சுயமரியாதைத் திருமணமொன்றை செல்லாத திருமணமென அறிவித்தது. ஆகவே இம்முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் சட்டப்பூர்வமற்ற கணவன்/மனைவி/குழந்தைகள் என்றிருந்த அவல நிலையை நீக்க சுயமரியாதைத் திருமணச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார் அண்ணா. பெரியார் மிகவும் மகிழ்ந்தார். அண்ணா ராஜினாமா செய்த தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கருணாநிதியின் மருமகன் முரசொலிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக பெரியாரே பிரச்சாரம் செய்தார். முரசொலிமாறன் வென்று நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்.

தனது 6 மாதகால மௌனத்தைக் கலைத்துவிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் ஜெயப்பேரிகை எனும் பத்திரிகை வெளியீட்டு விழாவில் பேசத்தொடங்கினார் காமராசர். ஈ.வே.கி.சம்பத் தொடங்கிய இப்பத்திரிக்கையில், கம்யூனிசத்தை சுவாசிக்கின்ற திமுகவை அடியோடு வெறுக்கின்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதையொட்டி 11 சிலைகள் திறந்து வைக்கப்பட்டன. நினைவுத் தபால் தலை வெளியீட்டு விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு செய்து கொடுத்த தபால் தலையில் உள்ள வார்த்தைகள் எல்லாம் ஹிந்தியில் இருக்கவே அந்நிகழ்வைத் தடை செய்தார் அண்ணா. ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்ததாகச் சொல்லி மீண்டும் ஹிந்தியையே புகுத்தியது மத்திய அரசு. இதனை எதிர்த்து மாணவர்கள் மீண்டும் ஐந்தாவது மொழிப்போரைத் தொடங்கினர். இதில் கலந்து கொண்ட முக்கிய மாணவரே பின்னாளில் சபாநாயகரான சேடப்பட்டி முத்தையா.  இம்முறை கருணாநிதி, அண்ணா என அனைவரும் மாணவர்களைச் சந்தித்துப் பேசினர். சட்டமன்றத்தில் ‘இந்தி ஒழிப்புத் தீர்மானம்’ என்ற ஒன்றை நிறைவேற்றினர். இதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடுப்பில் இருந்த மத்திய அரசு பல்வேறு காரணங்களைக் கூறி திமுகவின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அது  தோல்வியில் முடிந்து திமுகவே வென்றது.

 

கீழவெண்மணி சம்பவம்:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணா, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் தமிழகம் திரும்பிய அடுத்த மாதத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தஞ்சை மாவட்டத்தில் நடந்தது. பண்ணையாளர்கள் விவசாயிகளை கொத்தடிமைகளாக நடத்திய அந்தக் காலத்தில் சவுக்கடி கொடுப்பது, வாயில் சாணியைக் கரைத்து ஊற்றுவது போன்றவையெல்லாம் சாதாரணமான தண்டனைகள். தங்கள் உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அடிப்பது, உதைப்பது, கொல்வது போன்றவையெல்லாம் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தவண்ணம் இருந்தன. திமுக ஆட்சியில் இதற்கென்றே கிசான் காவலர்கள் என்ற பிரத்யேகப் பிரிவு இயங்கியது. இருந்தும் 25 டிசம்பர் 1968 அன்று கீழவெண்மணி என்ற கிராமத்தில், பண்ணையாளர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்கள் புகுந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதற்றமடைந்த மக்கள் கும்பலாக ஓடிச்சென்று ராமையா என்பவரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தனர். அனைவரும் ஓரிடத்தில் குவிந்தது வசதியாய் போகவே, அந்த வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு சுலபமாக வேலையை முடித்தனர் அடியாட்கள். அதில் தாய் ஒருத்தி தனது குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியாக எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து வெளியே தூக்கிப் போட்டாள். ஆனால் அடியாட்களில் ஒருவன் அக்குழந்தையை எடுத்து அரிவாளால் வெட்டி மீண்டும் வீட்டுக்குள்ளேயே விசிறி எறிந்தான். அண்ணா அதிர்ச்சியில் உறைந்தார். அவரது ஆட்சியில் இது ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இது தொடர்பாக நடந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடு விடுவிக்கப்பட்டது மற்றொரு அதிர்ச்சி. நீதி விசாரணையில் இவர் தப்பினாலும் சில ஆண்டுகளிலேயே பாதிக்கப்பட்ட மக்களால் இவர் கொலை செய்யப்பட்டார்.

 

அண்ணா மறைந்தார்:

வடக்கெல்லை போராட்டத்திற்கு ம.பொ.சி என்றால் தெற்கெல்லை போராட்டத்தில் புகழ்பெற்றவர் கேசவன் அப்பாவு நேசமணி . காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரது திடீர் மரணம் காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் ஏற்பட்டது. காங்கிரஸ் சார்பில் காமராஜர் நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான சுதந்திரா கட்சியின் வேட்பாளர் மத்தியாஸ் நிறுத்தப்பட்டார். இவர் தொழிலாளர்களைத் துன்புறுத்தும் ஒரு ரப்பர் தோட்டத்து முதலாளி என்பதால் கூட்டணிகளுல் ஒன்றான மார்க்சிஸ்ட் இவருக்கு ஆதரவளிக்கவில்லை. காமராஜர் வென்றார். திமுக தோற்றது. திமுகவுக்கு அடுத்த அடியாக அண்ணாவின் மரணம் நிகழ்ந்தது. அவரது மோசமான உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை அளித்த மருத்துவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இறுதி முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாம் என்று மருத்துவர் கூற, சரி எனத் தலையசைத்துவிட்டு புத்தகம் வாசிக்கத் தொடங்கினார் அண்ணா. ஆனால் சிகிச்சைக்கு முன்னரே 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணாவின் உயிர் பிரிந்தது. ஏராளமான ஜனத்திரள் இறுதி மரியாதை செலுத்தத் திரண்டது. பேருந்து, ரயில் என கிடைத்த வாகனங்களில் எல்லாம் ஏறி அண்ணாவைப் பார்க்க வந்துகொண்டிருந்தனர். அப்போது வல்லம்படுகை என்ற இடத்தில் ஆற்றுப் பாலத்துக்கு அடியில் ரயில் சென்ற போது, மேற்கூரையில் பயணம் செய்த  32 பேர் பாலத்துக்கு அடியில் உள்ள இரும்பில் அடிப்பட்டும், ஆற்றில் விழுந்தும் தங்கள் உயிரை இழந்தனர். இது போன்ற செய்திகள் சோகத்தை இன்னும் அதிகரித்தன. ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் அண்ணா.

 

முதல்வரான கருணாநிதி:

கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடம் நாவலர் நெடுஞ்செழியன் தான். ‘தம்பி வா! கழகத் தலைமை ஏற்க வா!’ என்று அண்ணா ஒருமுறை அழைத்ததும் நெடுஞ்செழியனைத்தான். தற்போது தற்காலிக முதல்வராக இருப்பதும் அவரே. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக திமுக நுழைந்த போதும் அவரைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கினார் அண்ணா. ஆனால் தற்போது கருணாநிதியுடன் முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்படவே தான் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனக் கூறி விலகிக்கொண்டார் நெடுஞ்செழியன். கலைஞர் முதல்வரானார். கலைஞரின் அமைச்சரவையில் இடம்பெற மறுத்த நெடுஞ்செழியன், துணை முதல்வர் பதவியையும் ஏற்க மறுத்தது கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆட்சி வேண்டாம், அமைச்சர் பதவி வேண்டாம் என்றெல்லாம் கூறிய நெடுஞ்செழியன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை வகிக்க விரும்பினார். ஆனால் அதற்கும் கலைஞரே சிறந்தவர் என எம்ஜிஆர் மற்றும் மற்ற உறுப்பினர்கள் கருதினர். ஆகவே இப்போது பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ‘அவைத்தலைவர்’ என்ற பதவியை ‘தலைவர்’ என திருத்தம் செய்து, திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி நெடுஞ்செழியனிடமே வந்தது. பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார்.

 

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்:

இப்பட்டத்தை எம்ஜிஆருக்கு வழங்கியவர் கிருபானந்த வாரியார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான இவர், ஒருமுறை நெய்வேலியில் நடந்த கூட்டமொன்றில் ‘ஆண்டவனை மதிக்காதவர்கள் அமெரிக்காவே சென்றாலும் டாக்டர் மில்லரை வந்தாலும் (அண்ணாவின் மருத்துவர்) அவரின் முடிவு இப்படித்தான் ஆகும்’ எனும் பொருள் படும்படிப் பேசிவிட்டார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாட்டில் பெரியார் என்றொரு நச்சு ஆறு ஓடுகிறது’ எனக்கூறி அண்ணாவின் கோபத்துக்கு ஆளானார். தற்போதோ இவ்வாறு பேசிவிட்டார். கொதிப்படைந்த திமுகவினர் வாரியாரைத் தாக்கினர். வன்முறையை தடுக்க வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ‘புற்று நோயால் மரணம் அடைந்த ரமண மகரிஷிக்கு என்ன சொல்லப் போகிறார் வாரியார்?’ என்றெல்லாம் ஆவேசமாக கேட்டனர். கடைசியாக வாரியார், தான் கூறியதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டதன் மூலம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது. எனினும் புண்பட்ட வாரியாரின் மனதை ஆற்றும் பொருட்டு தன் சொந்த செலவில் சொற்பொழிவு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அதில் இப்பட்டத்தை தனக்கு வழங்குமாறு செய்தார் எம்ஜிஆர்.

 

இந்திரா காங்கிரஸ்:

இந்தியா-சீனா யுத்தத்தின் போது அடிக்கடி காங்கிரஸ் காரியக் கமிட்டி முழுவதையும் திரட்டி ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, மூத்த தலைவர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்கி ஆலோசனை கேட்டார் நேரு. அதற்கு சிண்டிகேட் என்று பெயர். நேரு மறைவிற்குப்பின் மூத்த தலைவர்கள் அனைவரும் சிண்டிகேட்டுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால் இளம் தலைமுறையினர் (இந்திரா ஆதரவாளர்கள்) சிண்டிகேட்டுடன் நெருக்கம் காட்டவில்லை. ஏற்கனவே மூத்த தலைவர்களை மதிக்காமல் நடந்து கொண்ட இந்திரா குடியரசுத் தலைவர் தேர்தலில், சிண்டிகேட் ஆதரித்த நீலம் சஞ்சீவ ரெட்டியை ஆதரிக்காமல் வி.வி.கிரியை முன்னிலைப் படுத்தினார். கருணாநிதியின் ஆதரவும் இந்திராவுக்குக் கிடைக்கவே வி.வி.கிரி குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை ஆதரிக்காமல், கட்சித் தலைமைக்கு எதிராகவே செயல்பட்டு வந்த இந்திராவை 12 நவம்பர் 1979 அன்று கட்சியிலிருந்து நீக்கினார் கட்சித்தலைவர் நிஜலிங்கப்பா. புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

அன்று முதல் காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த தலைவர்களை உள்ளடக்கிய காங்கிரஸ் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ என்றும்,  கட்சியிலிருந்து வெளியேறிய இந்திரா தொடங்கிய புதிய கட்சி ‘காங்கிரஸ் (ஆர்)’ என்றும் அழைக்கப்பட்டது. நிஜலிங்கப்பா ஸ்தாபன காங்கிரஸ் தலைவராகவும், ஜெகஜீவன் ராம் இந்திரா காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டனர். மக்களவையில் சிறுபான்மை அரசாக மாறியிருந்த இந்திரா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள். மீண்டும் ஒருமுறை கருணாநிதியின் ஆதரவு இந்திராவுக்குக் கிடைக்கவே தமது பதவியை தக்கவைத்துக் கொண்டார் இந்திரா.

 

கருணாநிதி – இந்திரா கூட்டணி:

வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு போன்ற இந்திராவின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு கருணாநிதி ஆதரவளித்தார். மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்ட பிறகு அவர்களது நிலப்பரப்புக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக கொடுத்து வந்தது மத்திய அரசு. இதை ஒழித்தால் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அத்தொகையை செலவழிக்கலாம் என்று இதற்கான மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தார் இந்திரா.

திமுக உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாகவும், காமராஜர் மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர்கள் இதனை எதிர்த்தும் வாக்களித்தனர். மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனது. இருந்தாலும் குடியரசுத்தலைவர் வி.வி.கிரி மூலம் இந்த மானியத்தை ரத்து செய்வதற்கான ஆணையை பிறப்பிக்க வைத்தார் இந்திரா. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சமஸ்தான மன்னர்கள் பலரும் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றத் தீர்ப்போ ‘மானியங்களை ரத்து செய்வதற்காக குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச்சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ என்று வந்தது. கம்யூனிசத்தை சுவாசிக்கின்ற அத்தனைபேரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்தனர். மைனாரிட்டி அரசாக இருந்த இந்திராவால் இதனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் மக்களவையைக் கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை அறிவித்தார். தமிழகத்திலும் ஆட்சிக்கான பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஓராண்டு இருந்த நிலையில் சட்டமன்றத்தைக்  கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை அறிவித்திருந்தது திமுக. இந்தத் தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளாயின.

 

கருணாநிதி தலைமையில் வெற்றி – தேர்தல் 1971:

சென்ற தேர்தலில் அண்ணா வெற்றி பெற்றபோது, ‘இந்த திமுக அரசு பெரியாருக்குக் காணிக்கை’ என்று கூறினார். அப்போதே ராஜாஜிக்கு வருத்தம் ஏற்பட்டது. இப்போதோ ‘தேசத்தை நாசப்படுத்தும் இந்திராவின் திட்டங்களை ஆதரிக்கும் திமுகவை நான் எதிர்க்கிறேன்’ என்று பகிரங்கமாகக் கூறிவிட்டார். விளைவு காமராஜர் – ராஜாஜி என்ற இரண்டு எதிரெதிர் துருவங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிட்டன. இந்திரா காங்கிரஸ் – திமுக கூட்டணியுடன் இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோஷியலிஸ்ட், தமிழரசுக் கழகம், முஸ்லிம் லீக், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இணைந்தன. ஸ்தாபன காங்கிரஸ் – சுதந்திரா கூட்டணியுடன் உழைப்பாளர் கட்சி, குடியரசு கட்சி, சம்யுக்த சோஷியலிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்தன. இந்த இரண்டு வெவ்வேறு காங்கிரஸ் கூட்டணிகளுடனும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

எம்ஜிஆர் கருணாநிதிக்கு ஆதரவாகவும், சிவாஜி காமராஜருக்கு ஆதரவாகவும் தீவிரப் பிரச்சாரம் செய்தனர். காமராஜரா கருணாநிதியா என்று வந்தபோது, பெரியார் கருணாநிதியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது பெரியார் தலைமையில் நடைபெற்ற ‘மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்’ ஒன்றில் ராமன் படத்தை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் சிலர் நடந்து வந்தனர். அப்போது ஊர்வலத்தில் செருப்பு ஒன்று வந்து விழுந்தது. ஆவேசமடைந்த தொண்டர் ஒருவர் அந்த செருப்பை எடுத்து ராமன் படத்தை அடிக்கத் தொடங்கிவிட்டார். இதனை திமுக அரசு கண்டிக்காமல் ஊக்குவித்தது எனக்கூறி மாற்றுக் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இதற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பெரியார் கூறினார். பிரச்சார நேரத்தில் இது பரபரப்பாக பேசப்பட்டது. கடைசியாக தேர்தலின் முடிவில் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்று, இந்தியாவின் ஒரு மாபெரும் சக்தியாக இந்திராகாந்தி உருவெடுத்தார். தமிழகத்திலோ அண்ணா தலைமையில் பெற்ற வெற்றியைக் காட்டிலும், இப்போது கருணாநிதி தலைமையில் பெற்ற வெற்றி அதிக வீரியம் நிறைந்ததாக இருந்தது.

 

கருணாநிதி ஆட்சி:

இதயவீணை படப்பிடிப்புக்காக காஷ்மீரிலிருந்த எம்ஜிஆர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். பின்னர் தன்னை சுகாதாரத் துறைக்கு அமைச்சராக வேண்டுமென்று கேட்டதாக கருணாநிதி சொன்னார். திமுகவின் வெற்றிக்கு உடல் மற்றும் பொருளாதார ரீதியாக அத்தனை பங்களிப்புகளையும் செய்த எம்ஜிஆருக்கு இவ்வாறு கேட்க முழுத்தகுதியும் இருந்தது. ஆனால் ‘நடிப்புத்துறையில் பிரதானமாக இருக்கும் ஒருவரை அமைச்சராக சட்டம் இடம் தராது’ எனக் கூறி மறுத்தார் கருணாநிதி. ஏற்கனவே எம்ஜிஆருக்கு ஆகாத ஆதித்தனாரை (தினத்தந்தி அதிபர்) அமைச்சராக்கி வெறுப்பைத் தேடிக் கொண்டார் கருணாநிதி. இப்போது எம்ஜிஆரை அமைச்சராக்க மறுத்ததன் மூலம் மனக்கசப்பு அதிகமானது. இருந்தும் தொடர்ந்து பொருளாளர் பதவியிலேயே நீடித்தார் எம்ஜிஆர். குடிசை மாற்று வாரியம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, ஊனமுற்றோர் நல்வாழ்வு, விதவைகளுக்கான உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சுறுசுறுப்புடன் செய்து சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் கருணாநிதி.

தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அவர்  அளித்த பங்களிப்பைப் பாராட்டி முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்தது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ‘பள்ளிப் படிப்பைக்கூட நிறைவு செய்யாத இவருக்கு டாக்டர் பட்டமா’ என இதனை எதிர்த்தது பல்கலைக்கழக மாணவர் காங்கிரஸ் அணி. துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். கழுதையின் கழுத்தில் டாக்டர் என்ற அட்டையைத் தொங்கவிட்டெல்லாம் கேலி செய்தனர். இதுபோன்ற பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் பட்டமளிப்பு விழாவில் இனிதே பங்கேற்றுத் திரும்பினார் கருணாநிதி. விழா முடிந்ததும் மாலையில் மாணவர் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள், மாணவர்களைத் தாக்கி ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தினர். காலையில் தாங்கள் நிகழ்த்திய போராட்டத்திற்குப் பழிவாங்கவே மாலையில் தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் கூறினர். மறுநாள் காலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தாக்குதல் நடந்த இடத்திலுள்ள குளம் ஒன்றில் உதயகுமார் என்ற மாணவரின் பிணம் மிதந்தது. தாக்குதலுக்கு பயந்து ஓடி வந்து குளத்தில் விழுந்தாரா அல்லது காவலர்கள் அவரை அடித்து தூக்கி வீசினரா என்பது தெரியவில்லை. பெற்றோரே அடையாளம் காண முடியாத அளவுக்கு மாணவரின் முகம் உப்பி இருந்தது. ஆகவே இறந்தது உதயகுமாரே இல்லை என்றது காவல்துறை. ‘உதயகுமார் எங்கே?, இறந்தவர் யார்?, காவலர்கள் ஏன் தாக்குதல் நடத்தினர்? என்பதையெல்லாம் நீதி விசாரணை செய்ய உத்தரவிட்டார் கருணாநிதி. ஆனால் விசாரணை அறிக்கையோ, ‘இறந்தது உதயகுமாராக இருக்கலாம்; ஆனால் இதற்கும் காவல்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என்று கூறி கதையை முடித்தது. எது எப்படியோ! காங்கிரஸ் ஆட்சியில் மாணவர்கள் தாக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது அவருடைய ஆட்சியில் மாணவர்களுக்கு நிகழ்ந்த இந்த கொடுமை அவரது ஆட்சிக்கு ஒரு கரும்புள்ளியானது.

அடுத்ததாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நஷ்ட ஈடாக நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. தமிழ்நாட்டில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருப்பதால் இதை காரணம் காட்டி நிதியுதவி பெற முயன்றார் கருணாநிதி. ஆனால் மத்திய அரசோ புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் நிதி உதவி எனக்கூறி தமிழகத்துக்கு மறுத்தது. நிதி நெருக்கடிக்கு இதையும் ஒரு காரணமாகக் கூறி பகிரங்க மது விற்பனையைத் தொடங்கி வைத்தார் கருணாநிதி. ‘மனசாட்சி இடம் கொடுக்காத நிலையிலும் நிதி நெருக்கடி காரணமாக மதுவிலக்கு சட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது’ என அறிவித்தார். கால் நூற்றாண்டு காலமாக அமலில் இருந்த மதுவிலக்குக்கு விடை கொடுத்தார்.

 

கருணாநிதி இந்திரா கூட்டணியில் விரிசல்:

கருணாநிதி ஆதரவுடன் இயங்கும் மைனாரிட்டி அரசாக இப்போது இந்திரா  இல்லை. அவருக்கென்று தனி மெஜாரிட்டி இருந்தது. எனவே தான் நிதியுதவி விஷயத்தில்கூட கருணாநிதியின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மேலும் சென்னை சிம்சன் நிறுவனத்தில் நிலவிய தொழிலாளர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் தேவையில்லாமல் தலையிட்டது மத்திய அரசு. இது விஷயமாகப் பேச மாநில அமைச்சரை டெல்லிக்கு அனுப்புங்கள் என்றார் இந்திரா. ஆனால் ‘மாநில அரசுக்கென்று தனியே தொழிலாளர் நலத்துறை இருக்கும்பொழுது எதற்காக மத்திய அரசு தலையிடுகிறது’ எனக் கூறி அனுப்ப மறுத்து விட்டார் கருணாநிதி. பின்னாளில் இவர்கள் இருவருக்கிடையே உருவான மோதல்களுக்கெல்லாம் முதல்படியாக இதனைக் கூறலாம். அடுத்ததாக ‘திமுக அரசை கவிழ்க்கும் முயற்சியில் இந்திரா ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள்ளேயே ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து அவரைப் போட்டித் தலைமையாக பிரபலப்படுத்த முயல்கிறார்’ என்றெல்லாம் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியது போலவே எம்ஜிஆருக்கு ‘பாரத்’  பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது மத்திய அரசு. ஆகவே அவர் குறிப்பிட்டது எம்ஜிஆரைத்தானா என யோசிக்கும் போதே தமிழகத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நிகழத் தொடங்கின.

எம்ஜிஆர் மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் அதை கருணாநிதி விரும்பாதது போன்ற தோற்றத்தை எம்ஜிஆரிடம் உருவாக்கினர் சிலர். மேலும் கருணாநிதி மகன் மு.க.முத்து அப்போதுதான் நடிக்கத் தொடங்கினார். அவருக்கான ரசிகர் மன்றங்கள் உருவாகும்போது எம்ஜிஆர் உடைய ரசிகர் மன்றங்கள் முத்துவினுடையதாக மாற்றப்படுவதாக எம்ஜிஆருக்கு செய்திகள் வந்தன. தேர்தல் நிதி விஷயத்திலும் அவருக்குத் தெரியாமல் பணப் பரிமாற்றங்கள் நடந்தன. இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பொது மேடையில் வைத்து எகிறி விட்டார் எம்ஜிஆர்.

 

கருணாநிதி – எம்ஜிஆர் மோதல்:

ராயபுரம் ரசிகர் மன்றக் கூட்டமொன்றில் பேசிய எம்ஜிஆர், ‘திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஊழல் புரிகின்றனர்; ஒவ்வொருவரும் அவரவர்களது சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும்’  என்றெல்லாம் அடுக்கடுக்காகப் பேசிவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் ‘சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவரது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்ற சட்டம் (1969-ல்) கொண்டு வந்தவரே கருணாநிதிதான். இந்திராகாந்தியே நிராகரித்தும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அதன்படி கணக்கும் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சியின் செயற்குழுவில் பேச வேண்டிய விஷயத்தை பகிரங்கமாகப் பேசியதற்கு விளக்கம் கேட்டு எம்ஜிஆரை தற்காலிக நீக்கம் செய்தார் கட்சியின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன். திமுகவில் எம்ஜிஆரின் முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்த முரசொலி மாறன் மற்றும் நாஞ்சில் மனோகரன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் அதற்குள் திமுகவினருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்குமிடையே அடிதடி மோதல் வலுக்கவே பேச்சுவார்த்தைக்கே இடமில்லாமல் எம்ஜிஆர் பிரிந்து அதிமுக என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். ராஜாஜி அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார். ஆனால் காமராஜர் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார்.

கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே எம்ஜிஆர், திமுகவினர் மீது 40 பக்க புகார் பட்டியலைத் தயாரித்துக் கொண்டு ஆளுநரிடம் (கே.கே.ஷா) சென்று கொடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.கல்யாணசுந்தரமும் இந்த புகார் பட்டியல் உருவாக்கத்திற்கு உதவினார். ஆளுநரோ ‘சட்டப்படி இதை முதலமைச்சருக்குத் தான் அனுப்புவேன் ‘ என்று கூறவே கொடுத்த பட்டியலைத் திரும்பப் பெற்றுக் கொண்டு நேரடியாக குடியரசுத் தலைவரிடம் (வி.வி.கிரி) சென்று நீட்டினார். அவரும் எம்ஜிஆர் எதிர்பார்த்தது போலவே இந்திராவிடம் அதைக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னார். புகார்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய இந்திராவுக்கு அவ்வப்போது தமது பதில்களையும் விளக்கங்களையும் அனுப்பிக்கொண்டு இருந்தார் கருணாநிதி. சட்டமன்றத்திலும் சபாநாயகர் மதியழகன் எம்ஜிஆர் பக்கம் சாய்ந்து விட்டவே, ‘அரசைக் கலைத்துவிட்டு, மக்களைச் சந்தியுங்கள்’ என்றார். இதன் தொடர்ச்சியாக அவர் மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் மதியழகன். மேலும் திமுக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில், அதிக வாக்குகளைப் பெற்று தமது பலத்தை நிரூபித்திருந்தது திமுக. இதன் தொடர்ச்சியாக ஊழல் புகார்களுக்கு கருணாநிதி கொடுத்த பதில்கள் அனைத்தும்  ‘நம்பிக்கை வாக்கு’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

 

எம்ஜிஆருக்கு சில வெற்றிகள்:

திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் மரணம் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்  போட்டியிட்ட மாயத்தேவர் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான திமுகவால் இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் அந்த இடத்தைப் பெற்றதால் திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கொஞ்சம்கொஞ்சமாக திமுக உறுப்பினர்கள் அதிமுக பக்கம் வந்து சேர இது வழிவகுத்தது. இத்தனைக்கும் அதிமுக கட்சிக்கு கொள்கைகள், திட்டங்கள் என்று எதுவும் தெளிவாக இல்லை. கொள்கை பற்றிக் கேட்டால் வெறும் அண்ணாயிசம் என்று சொல்லுவார். இது கேலிக்கூத்துக்கு ஆளாகவே, பின்னர் சில தலைவர்களின் உதவியுடன் 29 பக்க அறிக்கை ஒன்றை உருவாக்கி அதற்கு அண்ணாயிசம் என்று பெயர் வைத்தார் எம்ஜிஆர்.

அடுத்து பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தான் காமராஜரும் – இந்திராவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். ஆனாலும் அதிமுகவுக்கு வெற்றி. இருந்தாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை. எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று நாஞ்சில் மனோகரன்  அதிமுகவில் இணைந்தார். பின் இவர்களிருவரும் டெல்லி சென்று இந்திராவை சந்தித்து பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பது பற்றி பேசினர். இதற்குக் கைமாறாக இந்திரா ஆசைப்பட்ட அசோக் லேலாண்ட் அதிபர் ரங்கநாதனை மாநிலங்களவைக்கு தேர்வு செய்து அனுப்பினார் எம்ஜிஆர். இருப்பினும் பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தபோது அதிமுக அரசைக் கைவிட்டது இந்திரா காங்கிரஸ். ஆகவே பதவி ஏற்ற மூன்றே வாரங்களில் பதவி விலகியது அதிமுக. நம்ப வைத்துக் கைவிட்ட இந்திரா மீது கோபப்பட முடியாததால் அமைதி காத்தார் எம்ஜிஆர். இதைத் தொடர்ந்து கோவை சட்டமன்றத் தொகுதியிலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எம்ஜிஆருக்கு மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது.

 

ஆட்சிப் பணிகளில் கவனம் செலுத்திய கருணாநிதி:

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தஞ்சாவூரில் ராஜராஜ மன்னனுக்கு சிலை வைத்தல், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் கட்டுதல் போன்ற ஆட்சிப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் கருணாநிதி. சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்குள் வைக்க ஆசைப்பட்டார் கருணாநிதி. அதை மறுத்து கோயிலுக்கு வெளியே வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் இந்திரா. அதன்படியே சிலை வெளியே வைக்கப்பட்டது. கருணாநிதியும் இந்திராவும் முட்டிக்கொண்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. டிசம்பர் 24, 1973 அன்று முதுமை காரணமாக பெரியார் இறந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை கொடுக்க ஆசைப்பட்டார் கருணாநிதி. ஆனால் எந்தவொரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத இவருக்கு அரசு மரியாதை சாத்தியமில்லை எனக்கூறி மறுத்தனர்  அதிகாரிகள். அதற்கு ‘காந்தி கூட எந்தவொரு அரசுப் பொறுப்பிலும் இல்லை; ஆனால் அவருக்கு  அளிக்கவில்லையா; அதேபோல பெரியாருக்கும் அரசு மரியாதை அளிக்க வேண்டும். காந்தி நாட்டுக்குத் தந்தை என்றால் பெரியார் தமிழகத்துக்குத் தந்தை. அவருக்கு அரசு மரியாதை அளிப்பதால் திமுக அரசு கலைக்கப்படுமானால் அதைவிட பெரிய பேறு எனக்கு ஏதும் இல்லை’ எனக் கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து மும்முறை குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பெரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

ராஜமன்னார் குழு பரிந்துரைத்த மாநில சுயாட்சி:

திமுகவுக்கு முன்னரே மாநில சுயாட்சிக்காகப் போராட்டங்களை நடத்தியது ம.பொ.சியின் தமிழரசுக் கழகம். இன்னும் சொல்லப்போனால், ‘மாநிலங்களுக்கு பரிபூரண சுயாட்சி என்ற அடிப்படையில்தான் காங்கிரஸ் மாகாண கமிட்டியானது மாநில அடிப்படையில் பிரிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸின் ஆரம்பகால வரலாற்றை எழுதிய பட்டாபி சீதாராமையா. ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்தது காங்கிரஸ். ஆகவே 1969-ல் மாநில சுயாட்சியை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்தார் ம.பொ.சி. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி அவர்கள் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் இதைப் பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தார். இக்குழு வெளியிட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் 16 ஏப்ரல் 1974 அன்று சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் கருணாநிதி .

பார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் (மணலி கந்தசாமி) ஆகிய கட்சிகள் இதனை ஆதரித்தன. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் இதனை எதிர்த்தன. ‘மாநில சுயாட்சி கேட்பதற்கான தகுதியே அற்றது திமுக’ என்றார் அதிமுகவின் ஹெச்.வி.ஹண்டே. ‘அப்படி என்றால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து கேட்கலாமா’ என்றார் கருணாநிதி. அதற்கு, ‘நல்ல ஆட்சியாக இருந்தால் கேட்கலாம். நாங்கள் வந்தால் கண்டிப்பாகக் கேட்போம்’ என்றார் ஹெச்.வி.ஹண்டே. அதற்குக் கருணாநிதியோ ‘நீங்கள் கேட்கும்போது ஒருவேளை திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் இதனைக் கண்டிப்பாக ஆதரிப்போம். பரந்த மனப்பான்மையோடு’ என்றார். மேலும் ‘அதிகாரம் திமுகவுக்காகக் கேட்கவில்லை. மாநிலத்துக்காகக் கேட்கிறோம். அது உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சுயாட்சியே கேட்கிறோம்’ என்றார் கருணாநிதி. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 161 பேரும் எதிராக 23 பேரும் வாக்களித்ததில் மாநில சுயாட்சித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டமேலவையிலும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது ‘ம.பொ.சியின் கொள்கைகளை கலைஞர் எடுத்துக்கொண்டு திமுகவுக்காக விளம்பரம் செய்துவிட்டார்’ என்ற கருத்துக்கு ம.பொ.சியின் பதில் சுவாரஸ்யமானது. ‘இந்தத் தத்துவம் எனக்குச் சொந்தமில்லை; இது அகில உலக அரசியல் சாத்திரம்; அதற்காக இங்கே ஒரு இயக்கத்தை நான் தொடங்கினே தவிர சுயாட்சித் தத்துவம் எனக்கு மட்டுமே ஏகபோக சொந்தமல்ல’ என்றார் ம.பொ.சி .

 

ஜெய் பிரகாஷ் நாராயணனின் பார்வையில் திமுக:

மறைந்த ராஜாஜிக்கு கட்டிய நினைவாலயத்தைத் திறந்து வைக்க ஜெ.பி என்கிற ஜெயப்ரகாஷ் நாராயணனை தமிழகத்துக்கு அழைத்தார் கருணாநிதி. ஜெ.பி என்பவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். நீண்டகால அரசியல் ஓய்வுக்குப் பிறகு மாணவர்களின் அழைப்பை ஏற்று இந்தியா முழுக்க ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தார். இவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று தமிழகம் வர ஒப்புக்கொண்டார். உடனே எம்ஜிஆருக்கு ஒரு யோசனை தோன்றியது . ‘ஜெ.பியும் ஊழலை எதிர்ப்பவர்; நாமும் திமுக அரசு ஊழலை எதிர்க்கிறோம்; ஆகவே ஜேபி நமக்கு ஆதரவு தருவார்’ என்ற எண்ணத்தில் எம்ஜிஆர், அதிமுகவின் பத்திரிக்கையான தென்னகத்தில் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘ஊழல் மலிந்து கிடக்கும் திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனும் பொருள் படும்படி குறிப்பிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து கருணாநிதியும், ‘ஜே.பி தமிழகத்தில் ஏதாவது குறைகளைக் கண்டால் சுட்டிக்காட்டலாம், நாங்கள் திருத்திக் கொள்கிறோம்’ என்று அறிக்கை வெளியிட்டார். ஜே.பி தமிழகம் வந்த போது இந்திரா காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்டவே காவலர்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். தாக்கப்பட்டது என்னமோ இந்திரா கட்சியினர், ஆனால் இதை எதிர்த்து கடுமையான அறிக்கையை வெளியிட்டார் இந்திராவின் ஆதரவை பெற விரும்பிய எம்ஜிஆர். பலத்த சர்ச்சைகளுக்கு இடையே திறப்புவிழா நடந்தது. அதில் பேசிய ஜே.பி ‘தமிழகத்தில் நிலவும் லாட்டரி சீட்டுகளை தடை செய்ய வேண்டும்’ என்று கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தார். அதனை உடனே ஏற்று ‘அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் லாட்டரி சீட்டுக்குத் தடை விதிக்கப்படும்’ என்று மேடையிலேயே அறிவித்தார் கருணாநிதி. மிக்க மகிழ்ச்சி அடைந்த ஜே.பி ‘இதுதான் ராஜாஜிக்கு உண்மையான அஞ்சலி’ என்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் எம்ஜிஆர் எழுதிய கடிதமொன்று ஜே.பியிடம் தரப்பட்டது. இதற்கான பதிலை மறுநாள் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் ஜே.பி.

அப்போது எம்ஜிஆரின் கடிதத்தில் தரக்குறைவான வசைமாரிகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளைக் கூறுவது சுலபம் அவற்றை ஆதாரத்துடன் நிரூபித்து கடினம் என்றும் கூறினார். மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான பதிலை கருணாநிதி புத்தகமாக அச்சடித்து வெளியிட்டது, வேறு எந்த மாநில முதல்வரும் செய்ய முன்வராத காரியம் என்றும் கூறி பாராட்டினார். இதுமட்டுமல்லாமல் அதிமுகவை ‘கொள்கையற்ற சினிமாக் கூட்டம்’ என்றும் தன்னுடைய டைரியில் பதிவு செய்திருந்தார். ஜே.பி – கருணாநிதி நெருக்கம் எம்ஜிஆரை மட்டுமில்லாமல் இந்திராவையும் கலவரப்படுத்தியது.

 

செல்லாக் காசின் பொல்லாக் கோபம்:

1971-ல் நடந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று பிரதமரானார் இந்திரா. அதே தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயணன் இந்திரா மீது வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அரசு ஊழியர்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களையும் தேர்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தியது முதலிய ஆறு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய அந்த வழக்கின் தீர்ப்பு 1975-ல் வெளியானது. இந்திரா விதிமுறைகளை மீறி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் அது செல்லாது எனவும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும் தீர்ப்பு வந்தது. தனது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த இந்திராவுக்கு அங்கும் தோல்வியே. பிரதமராக நீடிக்கலாம் ஆனால் நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற முறையில் தீர்ப்பு வந்தது. எனவே இந்திராவை பதவி விலகக் கோரி கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் கலவரக் குரல்கள் வெடித்தன. அசாதாரண முறையில் இதற்கு ஒரு தீர்வை உருவாக்கினார்  இந்திரா. குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலியின் உதவியுடன் ‘உள்நாட்டு சக்திகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனக்கூறி அவசரநிலைப் பிரகடனம் ஒன்றை அறிவித்தார்.

அவ்வளவுதான்! இனி இந்திரா வரைந்ததுதான் வட்டம்! அவர் போட்டது தான் சட்டம்! தன்னை எதிர்த்த அத்தனை பேரையும் தூக்கி சிறையில் அடைத்தார். யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்காமல் கைது செய்ய ‘மிசா’ (இந்தியா-சீனா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட சட்டம்) சட்டத்தைப் பயன்படுத்தினார். மொரார்ஜி, சரண்சிங், வாஜ்பாய், அத்வானி என அனைவரும் கைதாகினர். முக்கியமாக ஜே.பி.யின் கைது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜே.பி.யின் கைதைக் கண்டித்து ‘செல்லாக்காசின் பொல்லாக் கோபம்’ என கட்டுரை எழுதினார் வலம்புரிஜான். இந்தக் கட்டுரை வெளியான சபதம் இதழை கடை கடையாகச் சென்று கைப்பற்றும் வேலையைச் செய்தனர் காவல்துறையினர். மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடிப் பேசும் உரிமை முதலியவை ரத்து செய்யப்பட்டதோடு பத்திரிக்கைகளுக்கும் வாய் பூட்டு போடப்பட்டது. இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ‘ இருபது அம்சத் திட்டம்’ ஒன்றையும் வெளியிட்டார் இந்திரா. ஆனால் இத்திட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே திமுக அரசால் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

திமுகவின் கெத்து:

நாடு தழுவிய அளவில் கைதுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் கைதுகள் இல்லை. காரணம் இங்கே நடப்பது திமுக ஆட்சி. ‘மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு விசா வாங்க வேண்டியிருக்கும்’ என்று மேடைகளில் தைரியமாக எதிர்த்தனர் திமுகவினர். ‘ஜனநாயக ஒலியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் இந்திராவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக.  தமிழ்நாட்டில் மட்டும்தான் சுதந்திரக் காற்று வீசுகிறது என்றார் ஜே.பி. கைதுக்குத் தப்பி தலைமறைவான தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு கருணாநிதியே அடைக்கலம் கொடுத்தார். காமராஜரும் கருணாநிதியும் இணைந்து எமர்ஜென்சியை எதிர்த்து வந்தனர்.

ஆனால் எம்.ஜி.ஆரோ சரணாகதியாக இந்திராவை ஆதரித்து, ‘சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க உங்கள் தலைமையே நாட்டில் நீடிக்க வேண்டும்’ எனத் தந்தி அனுப்பினார். இந்நிலையில் 2 அக்டோபர் 1975 அன்று உடல்நிலை மோசமானதால் மரணமடைந்தார் காமராஜர். தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்திரா காந்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து காமராஜர் ஆசைப்பட்டதாகக் கூறி ஸ்தாபன  காங்கிரசை இந்திரா காங்கிரஸ் உடன் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் இந்திரா. காமராஜரின் விருப்பம் இதுவல்ல எனக்கூறி சில ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். அப்போது கோயம்புத்தூரில் 20 லட்சம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தியது திமுக. ஏழு மைல் நீளத்துக்கு ஊர்வலம் நடந்தது.

நெருக்கடி நிலைக்கு எதிராக ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது திமுக. எமர்ஜென்சி அமலில் இருக்கும் சமயத்தில் நடத்தப்பட்ட மாநாடு என்பதால் இதற்கு தேசியத் தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆத்திரமடைந்த இந்திரா ‘தமிழ்நாட்டில் இரண்டு கட்டுப்பாடற்ற தீவுகள் இருக்கின்றன’ என்றார். அவர் குறிப்பிட்டது தமிழ்நாடு மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி நடக்கும் குஜராத். இதைத்தொடர்ந்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் ஓம் மேத்தாவை தமிழகத்துக்கு அனுப்பினார் இந்திரா. ‘கோவை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை வாபஸ் பெற்றால் திமுகவின் ஆட்சியை ஓராண்டுக்கு நீட்டித்துத் தருகிறோம்’ என்றார் ஓம் மேத்தா. எதற்கும் அடிபணியவில்லை கருணாநிதி.

 

சிறைக்குள் சித்திரவதைகள்:

தமிழக ஆளுநர் கே.கே.ஷாவை வற்புறுத்திக் கையெழுத்து வாங்கி திமுக அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார் இந்திரா. ‘சட்டம் ஒழுங்கு காரணமாக திமுக அரசு கலைக்கப்பட்டது’ என்றார். திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் எம்.ஜி.ஆரோ தைரியமான நடவடிக்கை என்று பாராட்டினார். ‘ஜனநாயகத்தைக் காத்த இந்திரா காந்திக்கு அதிமுகவின் முழு ஆதரவும் உண்டு’ என்று வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆட்சிக்கலைப்பைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் தொடங்கின. ஸ்டாலின், ஆசைத்தம்பி, வீரமணி, ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு லத்திகளாலும் பூட்ஸ் கால்களாலும் சித்திரவதைக்கு ஆளாகினர்.

‘ஹிட்லராகிறார் இந்திரா’ என்ற தலைப்பில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக முரசொலி நாளிதழின் ஆசிரியர் முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டார். கொடுமைகள் தாங்காமல் சிட்டிபாபு எம்.பி., சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறையிலேயே மரணம் அடைந்தனர். பின்னாளில் இத்தகைய அதிகார அத்துமீறலுக்காக அமைக்கப்பட்ட இஸ்மாயில் விசாரணைக் கமிஷனிடம் சிட்டிபாபுவின் டைரி சிக்கியது. அதில் அவர் அனுபவித்த சித்திரவதைகளை எழுதியிருந்தார். மேலும் ‘நினைவிழக்கும் வரை அடித்துக் கொண்டே இருந்தனர். நிர்வாணமாக ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்து எரியும் மெழுகுவர்த்தி கொண்டு சுட்டனர்’ என்றெல்லாம் தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார் இன்றைய இந்து முன்னணித் தலைவரான இராம.கோபாலன். இதுபோன்ற சித்திரவதைகள் தாங்கமுடியாமல் பலர் திமுகவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியின் கார்ட்டூன்கள் இந்திராவை கேலி செய்திருந்ததால் அவருக்கும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.

‘செய்திகளை பத்திரிக்கையில் போடுவதற்கு முன்னர் தணிக்கைக்கு அனுப்ப வேண்டும்’ என்ற உத்தரவால் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அறிஞர் அண்ணா என்று எழுதினால் அறிஞர் எனும் வார்த்தை நீக்கப்பட்டது. பெருந்தலைவர் என்ற வார்த்தையை உபயோகிக்கவும் தடை. பார்ப்பனர் என்று எழுதினால் அதை பண்டிதர் என்று மாற்றினார். சங்கராச்சாரி என்பது சங்கராச்சாரியார் என்று மாற்றப்பட்டது. இதுபோன்று பல கெடுபிடிகள் தொடர்ச்சியாக நடந்தேறின. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் திமுக மீது கொடுத்த பழைய ஊழல் புகார்கள் இப்போது தூசி தட்டி எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் கருணாநிதி மற்றும் அவரது அமைச்சர்கள் மீது ‘சர்க்காரியா கமிஷன்’ அமைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை, கருணாநிதி பலமுறை கொடுத்தபோதும் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகவே வெளியிட்ட போதும்கூட இன்னும் அடங்கவில்லை மத்திய அரசு.

புகார்களை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இக்குழுவின் தலைவராக இருந்த ராஜகோபாலன் அவர் எழுதிய ‘என் காவல் சுவடுகள்’ எனும் புத்தகத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் ‘திரு.கருணாநிதி மீதான புகார்கள் அனைத்தையும் மேலெழுந்தவாரியாகக் கொடுத்திருந்தார் எம்ஜிஆர். புகாரில் என்ன இருக்கிறது என்பது பற்றிய செயல்முறை நுட்பங்கள் கூட ஏதும் அவருக்குத் தெரியவில்லை. வெறும் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து கொடுக்கப்பட்ட புகார்களில் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருந்தார் எம்ஜிஆர்’ என்று குறிப்பிட்டுள்ளார். கமிஷன் தனது விசாரணையைத் தொடங்கியிருந்தபோதுதான் மூன்று மாதங்களாக நிலுவையில் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் – இந்திரா காங்கிரஸ் இணைப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்திரா காந்தி பங்கு பெற்ற அந்த விழாவில் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.கே.மூப்பனார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

பச்சை குத்திக்கொள்ள சொன்ன எம்ஜிஆர்:

‘மாநிலக் கட்சிகளையெல்லாம் மத்திய அரசு தடை செய்யப் போகிறது’ என்ற செய்தி பரவியதும் அதிகம் பதற்றமடைந்தவர் எம்ஜிஆர். தனது கட்சியின் பெயரை ‘அனைத்திந்திய அண்ணா திமுக’ என்று மாற்றினார். ஒரே வார்த்தையில் இதனை தேசியக் கட்சியாக மாற்றி விட்டார். உண்மையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. அதற்கு முன்னரே இவ்வாறு கட்சியின் பெயரை மாற்றிவிட்டார். மேலும் அஇஅதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் அண்ணா உருவம் பதித்த அக்கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்ள ஆணை பிறப்பித்தார்.

இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. பகிரங்கமாக எதிர்த்த இந்திரகுமாரியை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கினார் எம்ஜிஆர். ஆகவே பலரும் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்க கோவை செழியன், விஸ்வநாதன், விருதுநகர் சீனிவாசன் ஆகிய மூவரும் இணைந்து எம்ஜிஆருக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினர். அதில் ‘பச்சை குத்திக்கொள்வது பகுத்தறிவுக்கு முரணானது; இதனால் புற்றுநோய் உருவாகும் என்பதால் பச்சை குத்துதல் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது; நமது கழகத் தொண்டர்களை அரசியல் கொத்தடிமைகளாக மாற்றுவது போல் உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் ‘கட்சியின் பெயரை மாற்றியது நம்மை நாமே சந்தேகிப்பது போலாகும்; தேசிய ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொண்ட நிலையிலும் கட்சியின் பெயரை மாற்றாத அண்ணா அவர்களையே இது குற்றவாளியாக்குவது  போலாகும்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர். கடைசியாக, ‘கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை எந்தக் கணக்கையும் செயற்குழு பொதுக்குழுவில் எம்ஜிஆர் தணிக்கை செய்யவில்லை. கட்சி உறுப்பினர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் எந்த ஒரு சட்ட திட்டங்களின் கீழும் அமையவில்லை. கட்சி உறுப்பினர்கள் வகிக்கும் பதவிகளும் நியமன அடிப்படையிலேயே அமைகின்றன. வாக்கெடுப்பு நடக்கவில்லை. இது ஜனநாயகத்தை வலியுறுத்தும் நமது கட்சியில் மிகப்பெரிய முரணாக உள்ளது.’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தனர். ஆத்திரமடைந்த எம்ஜிஆர் கடிதம் எழுதிய மூவரையும் அதிமுகவிலிருந்து நீக்கினார். மேலும் ‘விருப்பமில்லாதவர்கள் பச்சை குத்திக் கொள்ளத் தேவையில்லை’ என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

 

பிரதமரானார் மொரார்ஜி தேசாய் – ஜனதா கட்சி:

‘நாட்டின் பிரதமர், மக்களவை சபாநாயகர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை; நாடாளுமன்றம் நியமிக்கும் அமைப்பு மட்டுமே விசாரிக்க முடியும்’ என புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவும் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டதால் இந்திராவுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு செல்லாததாகி விட்டது. ஆகவே ’18 மாதங்களுக்கு முன்பு நாட்டில் நிலவிய ஆபத்தான நிலை மாறி இப்போது ஆரோக்கிய நிலை திரும்பி விட்டதால் எமர்ஜென்சி மெல்ல மெல்ல தளர்த்தப்படும்’ என அறிவித்தார் இந்திரா.

மேலும் பிரதமர் தேர்தலுக்கான தேதியையும் அறிவித்தார். எமர்ஜன்ஸி நேரத்திலும் சரி, இப்போதும் சரி அவரைப் பின்னணியிலிருந்து இயக்கியது அவரது இளைய மகன் சஞ்சய் காந்திதான். எமர்ஜென்சி நிலைப்பாட்டை எடுக்க இந்திரா தயங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியதும், மிசா சட்டத்தின் கீழ் எந்தெந்த தலைவர்களையெல்லாம் கைது செய்யலாம் என்ற பட்டியலில் உருவாக்கித் தந்தவரும் சஞ்சய் காந்தியே. இப்போது தேர்தலை அறிவிக்க வைத்திருப்பதும் இவரே. இரு காங்கிரஸ் கட்சியினரும் இணைந்தாலும் தேசிய அளவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி இந்திராவுடன் இணையாமல் தனித்தே இயங்கியது. ஆகவே இந்தத் தேர்தலில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், பாரதிய லோக்தளம், சோஷியலிஸ்ட் கட்சி ஆகிய நான்கும் இணைந்து ‘ஜனதா கட்சி’ என்ற பொதுப்பெயரின் கீழ் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் அதிமுகவுடனும், ஜனதா திமுகவுடனும் இணைந்து போட்டியிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் தேசிய அளவில் 269 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது ஜனதா கட்சி. காங்கிரசுக்கு 152 இடங்களே கிடைத்தன. மொரார்ஜி தேசாய் புதிய பிரதமரானார். தன்னுடைய அரசியல் எதிரியான கருணாநிதியை மக்களவைத் தேர்தலில் தோற்கடித்திருந்தார் எம்ஜிஆர்.  அப்போதுதான் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆகவே  ‘தன்னுடைய தமிழக ஆட்சிக்கனவும் விரைவில் நிறைவேறப்போகிறது’ என்று மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தார் எம்ஜிஆர். இதன் தொடர்ச்சியை  இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

 

சந்திப்பிழைத் திருத்தி பற்றி ஐஐடியில் உரை

இன்று ஐஐடி சென்னையில், சென்னை லினக்சு பயனர் குழுவின் சந்திப்பில், நான் உருவாக்கிய சந்திப்பிழைத் திருத்தி பற்றி உரையாற்றினேன்.

கணியம் இதழில் நான் எழுதிய மின்னூல்களை பலரும் படித்துள்ளதாகச் சொன்னது இனிய செய்தி.

நிரலை Rule based Programming ஆக மாற்றினால், விதிகளை நிரலாக்கம் தெரியாதவர்கள் கூட எளிதில் சேர்க்கலாம் என்று மோகன் சொன்னார். அதைப் பற்றி ஆராய வேண்டும்.

இன்னும் நிறைய விதிகள் சேர்க்க வேண்டும். சீனிவாசன் அதை ஒரு இணையதளச் செயலியாக மாற்ற முயல்கிறார். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடுவோம்.

அதுவரை மூல நிரலை இங்கே காணலாம் – https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker

தொடர்ந்து உற்சாகமூட்டிவரும் அனைவருக்கும் நன்றி!

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!! இதோ எனது பரிசு!!!

திருமணமான நாள் முதல் என் கணவருக்கு ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்தே இதுவரை நான் அவருக்கு எந்த ஒரு பரிசுப் பொருளும் அளித்ததில்லை. இந்தப் பிறந்த நாளில் என் கணவர் வெகு நாட்களாக பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

‘கணவரை மயக்குவது எப்படி?’ என்பதற்குத் திருமணமான நாள் முதல் என் உற்றார் உறவினர் பலரும் பல்வேறு விதமாக அறிவுரை வழங்கி வந்தனர். அவர்கள் கூறிய தலையணை மந்திரம், வாய்க்கு ருசியாக ஆக்கிப் போடுவது, மாமியார் வீட்டில் அடங்கி நடப்பது (கடினம்தான். ஆனாலும் முயற்சித்தேன்), எப்போதும் பளிச்சென்ற முகத்துடன் இருப்பது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை இன்முகத்துடன் வரவேற்பது போன்ற அனைத்தையும் செய்து பார்த்தும், சீனிவாசன் மயங்குவதாகத் தெரியவில்லை.

ஆனால் நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கப்போகிறேன் என்று உட்கார்ந்தால் போதும். அவர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்! அவர் நான் நானாக இருப்பதையே விரும்புகிறார். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படும் ஒரு நபராக என் கணவர் விளங்குகிறார். ‘நான் படிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் போதும், எல்லா வேலைகளையும் அவரே கூட செய்து முடித்து விடுவார் (என் தாய் போன்று).

இப்படிப்பட்ட கணவருக்கு எப்படி என்னால் சாதாரணமாக ஒரு கடையில் சென்று பிறந்தநாள் பரிசை வாங்கி அளிக்க முடியும். ஆகவே அவர் ஆசைப்பட்ட திறந்த மூல தமிழ் Spell checker-ன் முதற்படியான இந்த சந்திப் பிழை திருத்தியை உருவாக்கினேன்.

இது என்னுடைய மூன்று நாட்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உருவானது. எந்தக் கடையிலும் கிடைக்காதது. என்னைப் பொருத்தவரை இதுவே நான் அவருக்கு அளிக்கின்ற முதல் விலை உயர்ந்த பரிசுப்பொருள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!

மூல நிரல் இங்கே – https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker

சந்திப்பிழைத் திருத்தி உருவாக்கும் முறை – காணொளி – https://youtu.be/eC82S7wOr3E

தமிழின் எழுத்துக்களை எளிதில் கையாள, முத்து அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய open-tamil பைதான் நிரல் பெரிதும் பயன்படுகிறது.
அவருக்கும் open-tamil குழுவினருக்கும் நன்றிகள்!

 

து. நித்யா,

பிப்ரவரி 18, 2018

நானும் ஒரு அசுரகுலத்துப் பெண்தான்

 

நூல்: அசுரன்
ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்,  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்.
வெளியீடு: மஞ்சுள் பப்ளிசிங் அவுஸ் பிரைவேட் லிமிடெட்,
7/32, தரைதளம், அன்சாரி சாலை, டார்யகஞ், புதுடெல்லி – 110 002, இந்தியா.

பக்கங்கள்: 666   விலை: ரூ.395/-

 

 

வழக்கமாக, வெற்றியாளர்களும் அவர்கள் அமைக்கின்ற அரசாங்கமும் நமக்கு என்ன கூறுகிறதோ அதுவே வரலாறு, அதுவே பாடதிட்டம்.  அவ்வாறே ராமாயணமும் நம்மை வந்து அடைந்துள்ளது.  இதுவரை தோற்றவர் தரப்பு வாதமோ, அவரது நியாயங்களோ நம்மை வந்து அடைந்ததே கிடையாது. இப்போதுதான் அசுரன் எனும் ஒரு புத்தகத்தை நான் படித்து முடித்தேன். இது ராமாயணக்கதையை ராவணனின் பார்வையில் இருந்து கூறுகிறது. “நான் ஏதோ ஒரு தேவலோகத்து அழகியல்ல! நானும் ஒரு அசுரகுலத்துப் பெண்தான்.” என்று நினைக்கும் அளவுக்கு இப்புத்தகம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தலைப்பினை வைப்பதற்கே நான் சற்று தயங்கினேன். ஏனெனில் உலகம் என்னை எதிர்மறை எண்ணம் கொண்டவள் என்று சுலபமாகச் சொல்லிவிடக்கூடும். ஆனால் இப்புத்தகத்தின் ஆசிரியரோ, கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட “ராமன்” எனும் வெற்றியாளனையும், “தேவகலாச்சாரம்” என்று சொல்லப்பட்ட சாதிப்பாகுபாட்டிற்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் வித்திட்ட ஒரு கலாச்சாரத்தையும் போட்டு வறுத்து எடுத்துள்ளார். என்னுடைய குலம் அழிக்கப்பட்டதை இன்று நானே ஒரு பண்டிகையாகக் கொண்டாடுகிறேனே என வருந்துமளவிற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் என்னை அவரது எழுத்துக்களால் மிரட்டியுள்ளார்.

ஒருவரின் அங்க அமைப்புகளைக் கொண்டு அவரைக் கீழ்நிலைப்படுத்துவது எந்த அளவுக்கு கேவலமானதோ, அதே அளவு கேவலமான செயல்தான் கீழ்தரமானவர்களையும், மேல்தரமானவர்களையும் அவர்களின் அங்க அமைப்புகள் மூலம் வேறுபடுத்திக் காட்டுவது. நான் சிறுவயதில் சின்னத்திரையில் கண்ட ராமாயணத்திலும் சரி, புத்தகத்தில் படிக்கும்போதும் சரி, தேவர்கள்  எனும் நல்லவர்கள் வெளிர் நிறத்தோலுடனும், முகப்பொலிவுடனும், முத்துப்போன்ற பற்களுடனும், கார்மேகக் கூந்தலுடணும் அழகிய உருவத்துடனும் இருப்பார்கள். ஆனால் அசுரர்கள் எனும் கெட்டவர்களோ கரிய நிறத்துடனும், எத்துப்பற்களுடனும், அடர்த்தியான புருவங்களுடனும், பறட்டைத் தலையுடனும், பொலிவற்றவர்களாகவும் இருப்பார்கள். (இதுபோன்ற தொலைக்காட்சித் தொடர்கள் பெரும்பாலும் இந்தி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும்). இதைப் பார்க்கின்ற என்னுடைய மனத்திலும் “ஒருவேளை நாம் ஒரு அரக்கி போன்று இருக்கிறோமோ?” என்ற எண்ணம் தோன்றி தேவலோகத்து அழகியாக மாற என்னென்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வேன். புருவங்களைத் திருத்துவேன்; முகப்பொலிவை ஏற்றுவேன்; எத்துப்பற்கள் இருப்பின் அதனை சரி செய்வேன்; கரிய நிறத்தில் தோல் மாறாமல் பாதுகாப்பேன். இதுபோன்ற அனைத்து விதமான சேட்டைகளையும் செய்து வந்தேன். ஆனால் இப்புத்தகத்திலோ மிக அழகான ஒரு வரி ராவணன் கூறுவதுபோல் இடம்பெற்றுள்ளது. “என் தங்கை சூர்ப்பனகை மற்றவர்கள் கண்களுக்கு வேண்டுமானால் அழகில்லாமல் தெரியலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை அவள் ஒரு பேரழகி” எனத் தொடங்கி அவள் குழந்தைப் பருவத்தில் செய்த குறும்புகள், அவளது செல்லக் கொஞ்சல்கள், அவளுடைய சுதந்திரப் போக்கு என்று அனைத்தையும் விவரிக்கிறான். இதைப் படிக்க படிக்க ஒருவேளை இது நம் இனத்தின் கதையாக இருக்குமோ என்று கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க வைக்கும். சமத்துவத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும்.

“உசுப்பேத்தி உசுப்பேத்தியே  உடம்ப ரணகளம் ஆக்கிடுறானுங் கபா” இது ராமனுக்கு கச்சிததமாகப் பொருந்தும். இப்புத்தகத்தின் படிப் பார்த்தால், ராமன் எப்போதும் தனது பார்ப்பன சமூகம் என்ன போதிக்கிறதோ அதைச் செய்யும் ஒரு சூழ்நிலைக் கைதியாகவே இருப்பான். மனைவியின் மீது நம்பிக்கை இருந்தும் மனதை கல்லலாக்கிக்கொண்டு வேத தர்மத்தின்படி தீயில் இறக்குகிறான். பின்னர் தன் மனைவியை ஒரு ராணி போல் வைத்து இந்த அரண்மனையில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தும், “தெய்வத்தின் அவதாரமாக இருக்கின்ற உன்மீது ஊர் மக்கள் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு குறைகூட இருக்கக்கூடாது”  என்று போதிக்கும் பார்ப்பன பெரியவர்களின் ஆலோசனைக்கினங்க கர்ப்பம் தரித்த தன் மனைவியை மீண்டும் காட்டுக்கு அனுப்புகிறான். ஆனால் ராவணனோ எந்த ஒரு வேத நெறிமுறைக்கும் அடங்காமல், தன் மனசாட்சிக்கு சரி என்று பட்டத்தை செய்பவன் போல்இருப்பான். அவன் செய்த தவறுகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தாலும், அவன் உணர்ச்சிகளின் மொத்த உருவமாக காட்டப்படுவான். போரின் போது தன் மனைவிக்கு மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்தபோதும்கூட, ராவணன் அவளை அரவணைத்து அரண்மனைக்குக் கூட்டிச் செல்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். “இதுவே அவனை தெய்வ நிலையை அடைவதிலிருந்து தடுத்திருக்கும் என நினைக்கிறேன். ராவணன் அந்த அளவுக்கு மனிதாபிமானம் நிறைந்த ஒருவன்.” – எனும் வரி என்னை மிகவும் ஈர்த்தது.

“நான்தான் கடவுள்னு சொல்றான் பார்; அவனமட்டும் நம்பாத; பூட்ட கேஸ் ஆயிடுவ” – எனும் வசூல் ராஜா வசனம் இங்கு சீதைக்கு கட்சிதமாகப் பொருந்துகிறது. அவள் திருமணம் செய்து கொண்ட ராமன் “கடவுளின் மறு அவதாரம்” எனும் காரணத்தால், தன் கணவனை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை அவள் இழந்துவிடுகிறாள்.  எனவே கணவனை “சுவாமி” என்று அழைத்தும், அவன் “தீயில் இறங்கு” என்று சொன்னால் இறங்கியும், “காட்டுக்குப் போ” என்று சொன்னால் காட்டுக்குச் சென்று தனித்து வாழ்ந்தும் வந்தாள். முழுவதுமாக கணவன் சொல்லுக்கு ஒரு அடிமை போன்று செயல்பட்டாள். இதையே ராமனுடைய பார்ப்பன சமூகமும் அனைத்துப் பெண்களுக்கும் போதித்து “கணவனை தெய்வம் போல் பாவிக்க வேண்டும். சீதை போல் நடக்க வேண்டும்” என்று கூறி வந்தது. தேவ குலத்துப் பெண்கள் ஒரு புழுக்களைப் போல் நடத்தப்படுவதாக இப்புத்தகம் விமர்சிக்கிறது. ஆனால் மண்டோதரியோ, தன் கணவன் தவறிழைக்கும் போதெல்லாம் அவன் கண்களைப் பார்த்து எதிர்த்துப் பேசுவாள். அவனை  “ராவணா” என்று பெயர் சொல்லியே அழைப்பாள்.  பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் சரிக்குசமமாக அசுர குலத்தில் வழங்கப்பட்டிருப்பதாக இடம்பெற்றுள்ளது.

ராமன் வென்ற பிறகு அவனது பிரதிநிதியாக இலங்கைக்கு அரசனாக்கப்பட்ட விபீஷணன் எவ்வாறு ஒரு சாதி சார்ந்த அமைப்புமுறையை நியாயப்படுத்துகிறான் என்று தெளிவாகக் கொடுத்துள்ளனர். மக்களை அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் கடவுளின் முகத்திலிருந்து பிறந்தவர்கள், அங்கிருந்து பிறந்தவர்கள், இங்கிருந்து பிறந்தவர்கள் என்று 4 நிலைகளில் பிரிக்கிறான். பின்னர் “கீழ் நிலையில் இருப்பவர்கள் திடீரென்று மேல் நிலைக்குச் செல்ல ஆசைப்படக் கூடாது; இந்தப் பிறவியில் நீங்கள் உங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தால், அடுத்த பிறவியில் சற்று மேல் நிலையில் உள்ள மனிதராக கடவுள் உங்களைப் பிறக்க வைப்பார். இவ்வாறே நீங்கள் எந்தப் பிறவியிலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் மேல் மட்ட மனிதர்களுக்கு வேலை செய்துகொண்டே வந்தால் இறுதியில் நீங்கள் தெய்வ நிலையை அடையலாம்” என்று கூறுகிறான். எனவே கல்வியறிவும் எந்த நிலையில் உள்ள மக்களுக்குத் தேவையோ அவர்களுக்கே வழங்கப்படுகிறது. சில காலங்கள் கழித்து கீழ்நிலையில் உள்ள சம்புகன் எனும் சிறுவன் எப்படியோ கல்வி கற்றவுடன், அவன் மேல்நிலை சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்ததையும், எனவே ராமனை வழிநடத்துகின்ற பார்ப்பனர்கள் தூண்டுதலின் பேரில் ராமன் அவனை கொன்றதையும் இங்கு தெளிவாக விளக்கியுள்ளார்.

எழுத வேண்டுமானால் இன்னும் எவ்வளவோ எழுதலாம். ஆனால் இதைப் படிப்பதை விட அசுரன் எனும் புத்தகத்தைப் படியுங்கள். “நல்லவர்கள் வாழ்வார்கள்! கெட்டவர்கள் அழிவார்கள்!” என்பதை ராமாயணம் வலியுறுத்தும்.  ஆனால் “அழிவு என்பது பொதுவானது. நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ யாரும் கிடையாது” என்பதை அசுரன் வலியுறுத்தும். “யாருக்குத் தெரியும் ?  இன்னும் பல நூறு நூற்றாண்டுகள் கழித்து “இந்தியாவின் தென்பகுதியில் கருப்பாகவும், அசிங்கமாகவும், தங்களுக்குள் பல்வேறு மொழிகளில் பேசிக்கொண்டும், தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்த அரக்க இனத்தை ஒருவன் தேவ அவதாரம் எடுத்து அழித்துவிட்டான்” என்று பின்னாளில் ஒரு “பெயர்தெரியாயணம்” வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

பிற விமரிசனங்கள் :

http://www.giriblog.com/2015/02/asura-tale-of-the-vanquished-book-review.html

http://www.unmaionline.com/new/2053-asuran.html

http://vasipporkalam.blogspot.in/2015/12/blog-post_25.html

https://m.facebook.com/DirectorRamOfficial/posts/299031373623918:0

ஐ லவ் ஸ்பீகிங் இன் தமிழ். ப்ரோமோட் தமிழ்

சற்று வெளியே சென்று நமது வீதிகளில் உள்ள கடைகளின் பெயர்களையும், நிறுவனங்களின் பெயர்களையும் படித்துப் பாருங்கள். எனது தலைப்பைப் போன்று பல்வேறு வகையான கேலிக்கூத்தன வார்த்தைகளை உங்களால் காணமுடியும்.

தமிழகத்தில் கடையோ நிறுவனமோ ஆரம்பிக்கும் ஒருவன், அதன் பெயரை “குமார் மருந்தகம்” , “குமார் தனியார் நிறுவனம்” என்று தமிழில் மட்டுமே வைத்துள்ளான்  என ஓர் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்போது அவ்வழியாகச் செல்லும் சிலர் தமிழகத்தில் தமிழ் தெரியாமல் வசிக்கும் அயல் மாநிலத்தவர் மற்றும் அயல் நாட்டினர் வசதிக்காக ஆங்கிலத்திலும் பெயர்பலகை வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். எனவே அவனும் அவர்களின் நியாயமான வேண்டுகோளை ஏற்று “KUMAR MARUNTHAGAM”, “KUMAR THANIYAR NIRUVANAM” என்று எழுதிவிட்டு நானும் ஆங்கிலத்தில் பெயர்பலகை வைத்துவிட்டேன் என்று கூறினால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இவ்வளவு பெரிய முட்டாள்தனம் தான் இன்று தமிழகம் முழுவதும் தமிழுக்கு நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம்! ஏன் அனைவரும் ஆங்கிலத்தில் வார்த்தைகளை
எடுத்து, அதனை தமிழில் எழுதுகிறார்கள்?

கீழே உள்ள பட்டியலின் இடது புறத்தில் சரியான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள பெயர்களும், வலதுபுறத்தில் தமிழ் தெரியாத முட்டாள் பெயப்பலகை வைத்தால் எப்படி இருக்கும் என்றும் கொடுத்துள்ளேன்.( இவை அனைத்தும் உதாரணப் பெயர்களே. உண்மை நிறுவனங்கள் இப்பெயரில் இருந்தால் அது தற்செயலானது. )

  • குமாரி திரையரங்கம் – குமாரி தியேட்டர்
  • அய்யனார் வங்கி – அய்யனார் பேங்க்
  • ஐரோப்பிய வர்ண சாயங்கள் – யூரோபியன் கலர் பெயிண்ட்ஸ்
  • வாணி முடிதிருத்தகம் – வாணி சலூன்
  • அம்மன் சிறப்பு அங்காடி – அம்மன் சூப்பர் மார்கெட்
  • வைத்தீசுவாரன் பட்டு & புடவைகள் – வைத்தீஸ் சில்க்ஸ் & சாரீஸ்
  • கமல் தையலாளர்கள் – கமல் டெய்லர்ஸ்
  • முத்து உணவகம் – முத்து ஹோட்டல்
  • தனுவின் அழகு மருத்துவ மனை – தனுஸ் பியூட்டி கிளினிக்
  • சகோதரிகள் அடுமனை – சிஸ்டர்ஸ் பேக்கரி
  • வைர மோடு வட்டிக் கடை – வைரமோடு பைனான்ஸ்

இவை வெகு சில உதாரணங்களே. வெளியே சென்று பாருங்கள். நமது வீதியில் உள்ள ஒவ்வொரு கடையின் பெயரும் இப்படித்தான் தமிழில் தப்பும் தவறுமாக எழுதப்பட்டிருக்கும்.

அதாவது இவர்களை தமிழ் தெரியாத முட்டாள்கள் என்று கூறுவதை விட,

Ø  பகட்டாக இருக்கும் ஒருவன் பேசுகின்ற மொழியின் அழகில் மயங்கி, அதனை
தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடி,

Ø  பகட்டு மொழியில் உள்ள வார்த்தைக ளை அப்படியே தன்னையும், தன் தாயையும்
இணைத்த மொழியி ன் எழுத்துக்களில் எழுதி அசிங்கப்படுத்தி

Ø  தன் தாய்மொழியில் உள்ள வார்த்தைகளை மண்ணைப் போட்டு மூடியவர்கள் என்று கூறலாம்.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”. ஏற்கனவே ௰, ௱, ௲ போன்ற தமிழ் எண் வடிவங்கள் புழக்கத்தில் இல்லாமல் மறைந்து விட்டன. இப்போது திரையரங்கம், முடிதிருத்தகம், அங்காடி போன்ற தமிழ் வார்த்தைகளும் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் இருந்து மறைந்து தியேட்டர், சலூன், மார்கெட் போன்ற தமிழ் எழுத்துக்களாக மட்டுமே உயிரோடிருக்கின்றன. இதுபோன்று ஆங்கில அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் எழுதி சிறிது காலம் எழுத்துக்களை மட்டும் வேண்டுமானால் உயிர்ப்பிழைக்க வைக்கலாம். ஆனால் கூடிய விரைவில் இவைகளும் அழியும்போது தமிழ் முழுவதுமாக அழிந்திருக்கும்.

ஒருவன் அவனுடைய தாய்மொழியை உன்னிடத்தில் செலுத்தி, அது உன்னுடைய தாய்மொழியாகவே நீ ஏற்றுக்கொள்ளுமாறு இவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தும்போது, அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு கூடவா உன்னிடத்தில் இல்லை. “தற்போது ஆங்கிலம் தான் எல்லாமே! ஆகவே எல்லாவற்றையும் நான் ஆங்கிலத்தில் மாற்றுகிறேன்” என்று கூறுவதற்கு ஒருவனின் தன்மானம் எப்படி இடம் கொடுக்கிறதென்று எனக்கு இன்னும் புரியவில்லை. முதுகெலும்பில்லதவன் மட்டுமே தனக்கென்று எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், பலம் பொருந்தியவர்களின் அடியில் வாழ்ந்து  உயிர் பிழைப்பான்.

ஒருவன் தன்னைப் பெற்ற தாயை  புறந்தள்ளிவிட்டு ஏதோ ஒரு வெள்ளைக்கார ஆயாவுக்கு விழுந்து விழுந்து உபசரணை செய்தால் கூட பெற்ற தாயை கைவிட்ட பாவம் அவனை சும்மா விடாது. அதேபோல தமிழ் வார்த்தைகளை யே ஆங்கில எழுத்துக்களில் எழுதி ஒருவன் சம்பாதிக்கும் பணம், கண்டிப்பாக அவனுக்கு, மனநிம்மதியையும், நிறைவான வாழ்க்கையையும் கொடுக்காது. இது சாபம் அல்ல. இவ்வாறு நினைத்துக்கொண்டால் தான் என்னால் சாலையில் ஓரளவுக்காவது நடமாட முடிகிறது. இல்லையென்றால், சாலையோரக் கடைகளின் பெயர்பலகையைப் பார்க்கும்போதெல்லாம், என் மனம் கொதிக்கிறது.

எனது சிறுவயது காலத்தில் இதுபோன்று தவறாக எழுதப்பட்ட பலகைகள் மூலைக்கு ஒன்றுதான் தென்படும் ( டியூசன் சென்டர் என்பது போல). அதைப் பார்த்து நாங்கள் சிரித்துவிட்டு சென்றுவிடுவோம். ஆனால் இன்றோ 90%  கடைகள் இவ்வாறே பெயர்பலகை வைத்துள்ளன. இப்போதெல்லாம் என்னால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான்  பொருட்கள் வாங்கும் கடைகளிலெல்லாம் “உங்களது கடையின் பெயர்பலகையில், எழுத்துப் பிழைகளும், பொருளற்ற வார்த்தைகளும் உள்ளன. அதை உடனடியாக மாற்றுங்கள்”  என்று தெரிவித்து விட்டே வருகிறேன். நான் பணிபுரிகின்ற நிறுவனத்தின் பெயர்கூட “XXXX டெக்னாலஜீஸ் லிமிடெட்” என்று எழுதப்பட்டிருந்தது. அதையும் “அஅஅஅ தொழில்நுட்ப நிறுவனம்” என்று மாற்றி எழுதுவதற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சிலர் “சரி! மாற்றி விடுகிறோம்” என்கிறார்கள். சிலர்  “நீங்கள் ஒருவர் அளிக்கும் புகாருக்காக பெயர்பலகையை மாற்ற முடியாது. அனைத்தும் இவ்வாறுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளன” என்று பதில் அளிக்கிறார்கள். என்னால் அனைத்தையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூட, என்னால் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. அடக்குமுறையை எதிர்த்து வாழ்வதே வாழ்க்கைமுறை.

தயவுசெய்து கேள்வி கேட்பதற்கு யாரும் தயங்க வேண்டாம். ஆங்கிலேயன் அவனது தாய்மொழியை உலகெங்கும் பரவச் செய்து அவனது தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமையை சிறப்பாக ஆற்றிவிட்டான். ஆங்கிலேயனுக்கு தமிழன் எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. ஆனால் தமிழ் வார்த்தைகள் அழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் முதலில் அதனை  அழிவிலிருந்து காப்போம். பின்னர் தமிழின் பெருமையை உலகெங்கும் அறியச் செய்வோம்.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?

வெள்ளக்காரன் வெள்ளக்காரன்தான்யா!!! காலையில சரியா 9 மணிக்கு வந்துருவான், மாலையில சரியா 4.30 மணிக்கு கிளம்பிடுவான். இவங்க எல்லாம் 7.30 மணிநேரம் தான் வேலை செய்யுவாங்களாம். நம்பள Onsite அனுப்பிவெச்சா  ஆளுங்கதான் “எங்க நாட்டுல எல்லாம் 8 மணிநேரம் வேலை செய்யுவோம்”-னு சொல்லி, அந்த அரை மணி நேரத்துக்கு அதிகமா காசு வாங்கிருவாங்க.
 
அதனால நம்மை 8 மணி நேரம் வேலை செய்ய சொல்லுவாங்க. அட அப்பயாவது 5 மணிக்கு கிளம்ப விடுவாங்களான்னு பாத்தா அதுவும் விடமாட்டாங்க. “8 hours of working excluding lunch break” னு சொல்லி மத்தியானம் சாப்டதுக்காக ஒரு 1 மணி நேரம் அதிகமா உக்காற சொல்லுவாங்க. சரி 6 மணிக்காவது வீட்டுக்கு போகலாம்னு பாத்தா, “Status Updates Meetings” னு சொல்லி ஒரு 1 மணி நேரம் இழுத்துறுவாங்க. அடிச்சு புடிச்சு 7.30 – 8 மணி போல கிளம்பினா, வீட்டுக்கு போகவே 9 மணி ஆகிடும். 10 மணிக்கு phone-ல ஒரு meeting வெப்பாங்க. தூங்க போற நேரத்துல எதுக்குடா வெக்குறீங்கன்னு கேட்டா, “When you are at onsite, you should be flexible with your timings” னு சொல்லுவாங்க. “வெள்ளக்காரன் மட்டும் 9 க்கு வந்துட்டு 4.30 க்கு போரனே. நான் ஏன் இப்படி கஷ்டப்படணும்” -னு கேட்டா, “When you are a contractor, you should show that you can able to do double the person’s shift” னு சொல்லுவாங்க.

இந்த மாதிரி நம்பள தொடர்ச்சியா வேலையை மட்டுமே செய்ய வெக்குறது, வெள்ளக்காரன் இல்ல;  contract எடுத்து நம்பள foreign-க்கு அனுப்பி வெச்சா நமது அலுவலகத்தில் கங்காணி வேலை பார்க்கிற உயர்மட்ட முதலாளிகள் தான்.  நான் கூட “சுதந்திரப் போராட்ட வரலாறு”  படிக்கும்போது வெள்ளைக்காரனைத் தான் வில்லன் போன்று கற்பனை செய்து வைத்திருந்தேன். வெள்ளைக்காரன்தான் நமது முதுகில் Iron Box-வைத்து தேய்க்கும் அளவிற்கு கொடூரமானவன் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு கொஞ்சம் வேறு மாதிரி சிந்திக்கத் தோன்றுகிறது. நமது ஆட்கள் அவனை எதிர்க்கும்போது , “இவர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு வெள்ளைக்காரன் சென்றிருப்பான். அவன்கீழ் வேலை பார்க்கும் நமது நாட்டு ஆட்களே தான் அவனிடம் நல்ல பேர் வாங்குவதற்காக இந்த Iron Box தண்டனையை வழங்கி இருக்கக் கூடும் என்று.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?

வெளிநாடு இலட்சியம் முடிந்தது. அடுத்தது என்ன ?

இன்னும் சிறிது நாட்களில் நான் என் குடும்பத்துடன் இங்கிலந்தை விட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டும். எங்களுடைய விசா காலம் முடிகிறது. எனக்கு ஏதோ சொர்கத்தை விட்டு மீண்டும் நான் வாழ்ந்த பூமிக்கு செல்வது போல் இருக்கிறது. இங்கு மின்சாரத் தடையில்லை, தண்ணீர் பிரச்சனை இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை, பேருந்து நிலையத்தில் துல்லியமான நேரத்துக்கு பேருந்து வந்து நிற்கிறது. மாற்றுத் திறனாளிகள் கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்த படியே செல்வதற்கு உரிய சாலை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. சொர்க்கம் என்றால் என்னவெல்லாம் கிடைக்குமோ அதெல்லாம் இங்கிருக்கும் மக்களுக்கு கிடைக்கிறது.
 
ஆனாலும் நாங்கள் தமிழ்நாடு செல்வதற்கு சந்தோஷப்படுவதற்கான ஒரே காரணம் எங்களுடைய சொந்தங்கள் அனைத்தும் அங்கேதான் உள்ளனர். எங்கு நோக்கினும் தமிழ் அங்கே தான் காணப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரையும் இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டால் நாங்கள் இங்கேயே சந்தோஷமாக சொர்கத்தில் வாழ்வது போல் வாழ முடியும். ஆனால் அதற்கான விசா தொகை எங்களிடம் இல்லை. எனவே இப்போது என்மனத்தில் தமிழ்நாட்டிற்கு முதல்வராகி தமிழ்நாட்டை இதுபோன்று மாற்றுவதற்கான முயற்சிகளை செய்து பார்க்கலாமா என்று தோன்றுகிறது. என் மனத்தில் இதுபோன்று ஆசைகள் எழும்போது  நான் எப்போதும் அதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன். ஆசைகளை மட்டும் வளர்த்துக்கொண்டே செல்வேன். ஆகவே இப்போது நான் அரசாங்கம், சட்டசபை, அதை அடைவதற்கான தகுதிகள் இவற்றைப் பற்றி எல்லாம் படிக்கத் தொடங்கியுள்ளேன். முதல்வராவதற்கு ஏதேனும் பரீட்சை இருந்தால், அதில் எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து தேர்வாவதற்கு முயற்சிக்கலாம். ஆனால் இப்பதவியை அடைவது எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது. அதனால் இப்பதவியை அடைவதைத் தவிர வேறு எப்படியெல்லாம் சென்று எனது நாட்டை இங்கிலாந்து போன்று மாற்ற முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
 
எனக்கு உண்மையாகவே வெளிநாட்டில் இருப்பது என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போன்றே தோன்றவில்லை. “இந்த வருடம்  இங்கிலாந்தில் இருக்கிறேன். அடுத்த வருடம் என் ஊரில் வாழப் போகிறேன்” என்றே சொல்லத் தோன்றுகிறது. உண்மையாகவே என் ஊரில் நான் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து முடித்தேன். இங்கு ஒரு வருடத்தை மொத்தமாக சேர்த்து நான் தள்ளிக் கொண்டிருக்கிறேன். எனக்கிருந்த வெளிநாட்டு மோகம் இப்போது தெளிந்துவிட்டது. ஆனால் என் நாடு இந்த நாடு போன்று இல்லையே எனும் சோகம் தொடங்கிவிட்டது. இதுவரை நான் வெளிநாடு சென்று வாழ்வதை எனது இலட்சியமாக வைத்திருந்தேன். இப்போதுதான் வெளிநாட்டில் இருப்பதற்கும் என் நாட்டில் வாழ்வதற்குமான வித்தியாசம் எனக்குப் புரிகிறது. ” சரி, எனது அடுத்த லட்சியமாக என்ன வைக்கலாம்? ” என்று யோசிக்கும் போது தான் எனக்கு இந்த முதல்வர் ஆசை வந்தது. ஆனால் இந்தப் பதவியை அடைவதற்கான வழி எனக்குப் புரியாத புதிராக உள்ளத்தால், “எனது அடுத்த லட்சியமாக எதை வைக்கலாம்? ” என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பெண்கள் முன்னேற்றம்

பின்வரும் கட்டுரை “வலைப்பதிவர் திருவிழா – புதுக்கோட்டை” நடத்தும் மின் – இலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது.

உறுதிமொழி: “இதற்கு முன் வெளியான படைப்பல்ல; முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“

வகை-(3):   பெண்கள் முன்னேற்றம் – கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்தஅறிவுரைகள் – ஏ4 பக்க அளவில் 4பக்கம் உள்ளது.

பெண்கள் முன்னேற்றம்

பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தலைப்பினைக் கொடுத்து எழுதச் சொல்வது சிலருக்கு புதிராக இருக்கலாம், சிலருக்கு சிரிப்பும் வரலாம். “முன்னொரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு இல்லாமல், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார்கள். ஆதலால் பெண்கள் முன்னேற்றம் என்பது பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இப்போது தான் எல்லா உரிமைகளும் கொடுத்து விட்டோமே! இன்னும் என்ன பெண்கள் முன்னேற்றம்?” என்று சில ஆண்கள் மனதிற்குள் நினைக்கலாம். எப்பொழுது ஒரு பெண்ணால் அவள் நினைத்ததை செய்வதற்கு சமுதாயத்தில் தடைகள் இல்லையோ அப்போதுதான் இந்தத் தலைப்பு தேவையற்றுப் போகும். எப்பொழுது ஆணுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் வர ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதுதான் இந்தத் தலைப்பு தேவையற்றுப் போகும். இந்தக் கால கட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லவும் கல்வியறிவு பெறவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டு செய்ய நினைக்கும், ஆனால் “சமுதாயத்தின் பால் உள்ள பயத்தினால்” அல்லது “பெண்களின் கடமை” என்று சொல்லப்படும் ஒருசில விஷயங்களினால் செய்ய முடியாமல் விட்டுவிடும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் இன்னும் உள்ளன.

மிகவும் உற்சாகமான இசை நிகழ்ச்சிகளில் ஆண்கள் கூட்டம் எழுந்து ஆடுவதைப் போல் பெண்களால் ஆட முடிவதில்லை. அதற்கான ஆசை மனதில் தோன்றியும், “பெண் என்பவள் குத்துவிளக்கைப் போன்று இருக்க வேண்டும்” என்று சொல்லி வளர்க்கப்படுவதால், அமைதியாகவே இருந்து விடுகிறாள். சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் “நாமும் விளையாட செல்ல வேண்டும், நமக்குப் பிடித்த பொது விஷயங்களில் பங்கேற்க வேண்டும்” என்று ஆசை வந்தாலும் கூட, ஏற்கனவே அதைச் செய்து கொண்டிருக்கும் கணவனோ, மகனோ திரும்பி வந்தால், அவர்களுக்கு உணவு சமைத்து வைக்கும் வேலையையே அவள் செய்ய முற்படுகிறாள். “கல்வியறிவில்லாத பெண் கலர் நிலம் போன்றவள்” என்று பாரதிதாசன் சொன்னார். ஆகவே அவர்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட்டு விட்டது. ” பெண் பாலில் பிறந்த காரணத்தால் தான் ஆசைப்படும் விஷயங்களை செய்யாமலேயே இறக்கும் பெண் பிறந்தும் பயனற்றுப் போகிறாள். ” என்று இப்போது சொல்கிறேன். இதை முயன்றால் கவிதையாக மாற்றுங்கள். பிற்காலத்தில் பெண்கள் நினைப்பதை செய்வதற்கு இது ஒரு வழிகாட்டியாக அமையும்.

இதையெல்லாம் படித்துவிட்டு, நினைத்தபடி நடந்து கொள்வதும், பொறுப்புகளிலிருந்து தப்பிப்பதும்தான் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா என்று யாரும் ஆத்திரமடைய வேண்டாம். இரு பாலினருக்கும் இடையே உள்ள உணர்ச்சி ரீதியான தடைகளை மட்டுமே இங்கு நான் சொல்லியுள்ளேன். மேற்கண்ட அனைத்து விஷயங்களும் இந்தியா போன்ற ஒருசில நாடுகளில் வாழும் பெண்களுக்கு உள்ள பிரச்சனை. இது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாட்டில் வாழும் பெண்களுக்குக் கிடையாது. இவர்களால் சுதந்திரமாக நினைத்த நேரத்தில் வெளியே செல்லவும், நினைத்தபடி ஆடவும், ஆடை அணியவும் முடிகிறது. ஆனாலும் கூட இங்கும் 100 பேருந்து ஓட்டுனர்களில் 20 பெண் ஓட்டுனர்களையே பார்க்க முடிகிறது. அவ்வாறே அலுவலகங்களிலும் 50 பேருக்கு 10 பெண் தொழிலாளிகளே உள்ளனர். பெண்கள் உண்மையிலேயே எண்ணிக்கையில் குறைந்தவர்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆணுக்கு சமமான எண்ணிக்கையிலேயே உள்ளனர். ஆனாலும் கூட ஏன் தொழில் துறைகளில் மட்டும் பாதிக்குப் பாதி கூட பெண்கள் இல்லை. பெண்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் இந்தியாவில் தான் இந்த நிலைமை என்றால், அவர்களை சுதந்திரமாக செயல்பட விடும் வெளிநாடுகளிலும் இதே நிலைதான்.

இதற்கான காரணம் என்னவென்று ஆழ்ந்து யோசிக்கும் போது, உண்மையில் பார்த்தால் எல்லா நாடுகளிலும், ஆண் என்பவன் அவன் பிழைப்புக்கு ஏதோ ஒரு தொழில் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. எனவே “வேலைக்குச் செல்லலாமா? வேண்டாமா?” என்று யோசித்து தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவனுக்கு இல்லை. ஆனால் இந்த சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதால், பாதி சதவிகித பெண்கள் செல்லலாம் என்றும், மாறுபாதி சதவிகித பெண்கள் செல்ல வேண்டாம் என்றும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே எல்லா துறைகளிலும் ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். அவ்வாறே வீட்டிற்குள் உள்ள தினப்படி வேலைகளை செய்யலாமா வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. அது ஆண்களுக்கு இருக்கிறது. எனவே பாதி சதவிகித ஆண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்யலாம் என்றும், மாறுபாதி சதவிகித ஆண்கள் செய்ய வேண்டாம் என்றும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகவேதான் வீட்டில் உள்ள வேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

ஒவ்வொருவரின் முன்னேற்றமும் அவர்கள் வெளியில் செய்யும் வேலைகளைப் பொறுத்தே அமைகிறது. எனவே அதனைக் கணக்கெடுத்துப் பார்க்கும்போது பெண்களைவிட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் “பெண்கள் முன்னேற்றம் தேவை” என்று கூறுகின்றோம். ஒருவேளை முன்னேற்றம் என்பது வீட்டில் செய்யப்படும் வேலைகளைப் பொறுத்து அமைந்திருந்தால், “வீட்டு வேலைத் துறை” எனும் துறையை உருவாக்கி நாம் அதனைக் கணக்கெடுத்துப் பார்த்திருப்போம். அப்போது ஆண்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், இந்தத் துறையில் “ஆண்கள் முன்னேற்றம் தேவை” எனும் தலைப்பு வந்தாலும் வந்திருக்கும்.

இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசித்தால், நமது வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்கு வெளியே சென்று செய்ய வேண்டிய வேலைகள், வீட்டிற்குள் செய்ய வேண்டிய வேலைகள் என்று இரண்டு வகையான வேலைகள் உள்ளன. இதனை பால் முறையே பிரித்து முன்னேற்றத்திற்கு தேவையான வேலைகளை ஆண் பாலும், மற்ற வேலைகளை பெண் பாலும் எடுத்துக்கொள்ளாமல், இரு பாலினரும் இரண்டு வகையான வேலைகளையும் சமமாகப் பிரித்துக் கொண்டாலே போதும். அனைத்து வகையான துறைகளிலும் (“வீட்டு வேலைத் துறை” உட்பட) இரு பாலினரின் எண்ணிக்கையும் சரிசமமாக இருக்கும்.

மனம் சொல்வதைக் கேளுங்கள்

” ” நாம் செய்தி வாசிப்பாளராக வேலைக்கு சேர்ந்து விடலாமா அல்லது தானாக முதலீடு செய்து குழந்தைகள் காப்பக்கம் நடத்தி சம்பாதிக்கலாமா? இல்லை இல்லை ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து விடலாம். இதுதான் நிம்மதியான சந்தோஷமான வேலை. நமக்குத் தான் நடனம் ஆடினால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறதே! பேசாமல் ‘Aerobics Trainer’ படிப்பு முடித்து காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் வகுப்புகள் எடுத்து சம்பாதிக்கலாமா? சமையல் தான் இப்போது IT-ல் வேலை பார்க்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு கடினமான வேலையாக இருக்கிறதே! பேசாமல் சமையல் செய்து அதை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் வைப்பது போன்று ஏதாவது ஒரு தொழில் செய்யலாமா? ஏதாவது பெரிய நிறுவனங்களிடம் ‘Franchise’ எடுத்து  கடை வைக்கலாமா? புதிதாக software company தொடங்கலாமா? இல்லை இல்லை இப்போது தான் இந்த தொழிலுக்கு demand இல்லையே. பிற்காலத்தில் விவசாயத்திற்குதான் தட்டுப்பாடு ஏற்படும் என்று சொல்கிறார்களே! இது போன்று demand இருக்கும் விவசாயத்தை செய்து அதில் பெரிய ஆள் ஆகிவிடலாமா? ” ”

மேற்கண்ட அனைத்தும் மனத்திற்கு நெருக்கமானவர்களை வீட்டில் விட்டு விட்டு மனம் ஒன்றாத ஒரு வேலையைச் செய்வதற்காக அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்லும் சில பெண்களின் மனதில் தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கும் கேள்விகள். கனவு, லட்சியம் என்றெல்லாம் சொல்லி விட்டு வேலைக்குச் சேர்ந்து  7 , 8 வருடம் ஆன பிறகு, கணவனையும் குழந்தைகளையும் ஒழுங்காகப் பராமரிக்க முடியாமல், செய்யும் வேலையிலும் ஒரு பெரிய ஈர்ப்பு இல்லாமல், தோராயமாக ஒரு 10 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே இருக்கும் ஒருசில பெண்களின் மனசாட்சி திடீரென வெள்ளை ஆடை அணிந்து கொண்டு கேள்விகள் கேட்கத் தொடங்கும். ” நீ எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய்? உன் மனத்திற்கு நெருக்கமானவர்களைப் பிரிந்து ஒரு வேலை செய்கிறாய் என்றால், அந்த வேலை கண்டிப்பாக உன் மனதிற்கு சந்தோஷம் தரக்கூடியதாகவோ அல்லது திருப்தி அளிக்கக் கூடியதாகவோ இருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு அழகிய வேலையையும் செய்யாமால் வெறும் பணத்திற்காகவா உன் பிரியத்திற்குறியவர்களை நீண்ட நேரம் பிரிகிறாய்? ” என்றெல்லாம் நமக்குள்ளேயே கேள்விகள் கேட்கப்படும்.  அப்போது தான் “Job Satisfaction” , “மனம் சொல்வதைக் கேளுங்கள்” என்ற வாக்கியங்களின் அர்த்தம் எல்லாம் முழுதாக விளங்கும். நான் இப்போது இந்த நிலையில்தான் இருக்கிறேன். என் மனத்திற்கு பிடித்த ஒரு துறையை இதுவரை நான் தேர்ந்தெடுக்காமலேயே விட்டு விட்டேன். “நான் எதில் சிறந்தவள்? என் மனம் எந்த வேலையைச் செய்ய ஆசைப்படுகிறது?” என்றெல்லாம் எனக்குள்ளேயே கேள்விகள் கேட்கப்படும்போது, இதுவரை அதைக் கண்டுபிடிக்காமலேயே விட்டு விட்டோமே என்று பதறுகிறது.

இப்போது கூட என்னால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் வீட்டை விட்டுவிட்டு நான் வேலைக்குச் செல்கிறேன் என்றால், அதன் பலன் வெறும் பணமாக மட்டும் இல்லாமல், அந்த வேலையின் மீது உள்ள ஈர்ப்பினால் நான் அந்த வேலைக்குச் செல்லவேண்டும் என்றே தோன்றுகிறது.